பார்வை
பார்வை
அதற்குத் தான்
எத்தனை பரிமாணங்கள்.
அந்த காலை நடை நேரத்தில்
பல நாட்களாய் என்னை
பார்த்தும் பாராமலும்
அவள் கொங்கைகள் ஆட ஆட
நடைபோடும் பட்டழகியவள்.
நான் பார்க்கிறேன்
பார்க்கக் கூடாத இடங்களையும் கூடத்தான்.
அவளுக்கும் அது தெரியும்
அவள் பார்வை
என் நோக்கோடு
குறுக்காக வெட்டும் போது
என் பார்வை எங்கோ
விலகி குறுகியோடும்.
இல்லை.
நான் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்
இள நங்கை இடை முதல்
இளகுவான அந்த
இரு உயர்ந்த மேடுகள் வரை.
அவள் என்னைப் பார்த்ததே அதனால்தான்
எதனால்தான்?
என்னுள்ளே
என் வெளியே
என் அனுமதியின்றி
எவனோ ஒருவன்
பிரவேசிக்கின்றான்
என அவளது 'ஏழாம் அறிவு' உணர்தியதோ என்னவோ.
அதனால்தான்
அந்த குறுக்கு வெட்டு நோக்கு
எனக்கு சில நொடிகள்
அவமான வெட்க்கத்தை தந்தாலும்
எனது 'ஆண்மை’
எனக்குத் தைரியம் தருகின்றது.
அவளுக்கோ சற்றே சங்கடம்.
ஒரே வெட்டாய்
எங்கேயோ இழுத்துக் கொண்டது
அந்தப் பார்வை.
அவள் மனதை
படிக்க முற்பட்டேன்.
நான் மட்டும்
அவளைப் பார்க்க
பார்வையுனூடே
கற்பனையில் பறக்க
எகோபித்த உரிமை உள்ளவனாய்
பார்க்கின்றேன்,
ரசிக்கின்றேன்,
உற்று நோக்குகின்றேன்,
எனக்கு ஒரு சந்தோசம்
ஏதோ ஒன்று திருப்தியாகிப்போனது.
இதிலும் ஒரு அழகியலோ
என்று நினைத்த நான்
பிறகு ஒரிரு நொடிகள்
சிந்தித்த போது
அவளும் அவளை நான் பார்க்க
ஒரு சிறு உரிமை கொடுத்தாளோ
என்றே நினைக்கத் தோன்றியது.
ஏனோ இந்தப் பொல்லாப் பார்வை
அவளை என் பொருள் என நினைத்து
எப்படி பெண்மையின் உண்மையினை
கேள்விகுறியாக்குவேன்
என் ஆண்மையும் அதன்
ஆதிக்க, அறிவீனத்தையும்
நியாயப்படுத்துகிறேன்.
என்ன ஒரு கயமை
அதன் மறு பெயர் தானோ ஆண்மை.