விவசாயம் செய்து பார்

கனவு காணுங்கள்
கலாம் சொன்னது.....
காதலித்துப் பார்
கவிப்பேரரசு சொன்னது....
விவசாயம் செய்து பார்
விரக்தியில் நான் சொல்வது.....

ஆம்.....
விவசாயம் செய்து பார்.....

மண் சத்து
தழைச் சத்து
சாம்பல் சத்து என
சத்துக்களின் அளவுகள்
அத்துபடியாகும் உனக்கு.....

பகல் இரவு என்ற
பருவகால மாற்றங்கள்
பழக்கமில்லாமல்
போகும் உனக்கு.....

மாடுகளின் தோழமை
மலிவு விலையில்
கிட்டும் உனக்கு.....

கோமனத்தை தவிர
வேறு ஆடையை நீ
மறந்தே போயிருப்பாய்.....

சலவை செய்து
இஸ்திரி போட்ட
வெள்ளை வேட்டி
வெள்ளை சட்டை
அணிந்து செல்வதாய்
கனவு மட்டும்
கண்டு கொள்வாய்.....

விவசாயம் செய்து பார்....

மழை வருமா என்று
வானத்தின் கருவளையத்தை
எட்டிப் பார்த்தே
உன் கண்கள்
பார்வை குறைந்து போகும்......

பசுமை வண்ணம் மட்டுமே
உனக்கு பிடித்த
நிறமாகிப் போகும்......

மூட்டை சுமந்தே
உன் தோள்கள்
கூன் விழுந்து போகும்.....

பழைய சோறும்
பச்சை மிளகாயும்
உனது மதிய உணவு
பதார்த்தங்களாகும்......

ஊர்மக்கள் எல்லோரும்
அறுசுவை உண்ண
ஓயாமல் உழைப்பாய்
ஆனால் உன் வீட்டு
சமையலுக்கு
அழுகிய தக்காளிக்கு
அல்லாடுவாய்......

விவசாயம் செய்து பார்......

ஏக்கர் கணக்கில்
பயிர் செய்வாய் - எனினும்
எட்டடிக்கு எட்டு
வீட்டில் குடியிருப்பாய்......

வருண பகவான்
சதி செய்தால்
வான் பகவானின்
கதியை நாடுவோரின்
பாதிப்பேரில் நீயுமிருப்பாய்......

சேன்டல் பவுடர்
பூசிய போது
வராத மணம்
சேறும் சகதியும்
பூசிய போது
உன் உடலில் வந்த தாய்
நீ எண்ணுவாய்.....

வேகமாக நீ
மரம் ஏறுவாய்
உன்னை விட
வேகமாய் தேங்காய் விலை
இறங்கியது தெரியாமல்....

விவசாயம் செய்து பார்....

கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
என்று கண்ணதாசன்
பாடிய வரிகளனைத்தும்
உனக்கான பெருமையென்று
மார் தட்டிக் கொள்வாய்.....

எலக்ட்ரிக் டிரெயின்கள் என
ஏகப்பட்ட வாகனங்கள்
வந்த பொழுதும் கூட
மாட்டு வண்டியே உன்
மெட்ரோ ரயிலென
எண்ணுவாய்.......

இலவச மின்சாரம்
கொடுப்பவருக்கே
உன் ஓட்டை
தானமளிப்பாய்......

தொலைந்த
உன் புன்னகையை
அறுவடை நாளன்று தான்
தேடிக் கண்டெடுப்பாய்......

கதிரவனுக்கு நன்றி சொல்ல நீ
கடனாளியாகிய நாளையே
பொங்கலென்று கொண்டாடும்
இந்தப் பொன்னுலகம்.....

கனவுகள் கனவாய்
போன பொழுதும் கூட
கவலைப் படுவதற்கு
காலமிருக்காது உன்னிடம்......

விவசாயம் செய்து பார்.....

---------- ஊ.வ.கணேசன்-----------

எழுதியவர் : ganesan uthumalai (4-Aug-15, 9:36 pm)
சேர்த்தது : ஊ வ கணேசன் 311084
பார்வை : 143

மேலே