காத்திருப்பதில்லை மரணம் -சந்தோஷ்

யாருக்கேனும்
உணர்ச்சிக் கிளர்ச்சியூட்டும் காதல்
கவிதைகள் வேண்டுமென்றால்
முன்பதிவு செய்துவாருங்கள்.
காத்திருக்கிறது எனது மரணம்.!

யாருக்கேனும்
ஒரு மரண வாக்குமூலத்தில்
கதை தயாரிக்க வேண்டுமெனில்
சொல்லி வையுங்கள்.
காத்திருக்கிறது எனது மரணம்..!

யாருக்கேனும்
காதல் தோல்வியிலோ
தொழில் நஷ்டத்திலோ
இருதயம் பாதித்திருந்தால்
என் மருத்துவரிடம் சொல்லிவிடுங்கள்
நன்றாக செயல்படும்
ஒர் இருதயத்தோடு
காத்திருக்கிறது எனது மரணம்.,!

யாருக்கேனும்
விழிகள் தேவையெனில்
எனது மருத்துவரை அழையுங்கள்.
நல்ல பார்வைத்திறங்கொண்ட
இரண்டு கண்களுடன்
காத்திருக்கிறது எனது மரணம்..!

யாருக்கேனும்
உடல் உறுப்பில்
எது வேண்டுமென்றாலும்
வாருங்கள் ! வாருங்கள் !!
மூளை, நுரையீரல் தவிர
அனைத்தும் இலவசம்...!
காத்திருக்கிறது எனது மரணம்..!

யாருக்கேனும்
நேர்மையான போலித்தனமற்ற
அன்பு, நட்பு, பாசம், காதல்
வேண்டுமென்றால்
உடனே வாருங்கள்..!
உங்களின் தாமதத்திற்கு
காத்திருப்பதில்லை எனது மரணம்..!

**
- இரா.சந்தோஷ் குமார்


நன்றி : கீற்று இணையத்தளம்

05 ஆகஸ்ட் 2015 அன்று கீற்றில் வெளியிடப்பட்ட எனது கவிதை.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (7-Aug-15, 9:43 am)
பார்வை : 128

மேலே