வருங்காலத் தமிழகம் - குட்டிக் கதை

................................................................................................................................................................................................
காலம்: 2045- ஆகஸ்டு ஏழாம் தேதி. இடம்: தமிழ்நாடு
ஒரு புது சொந்தக்கார பிச்சைக்காரரைப் பார்க்க இன்னொரு மிகப் பழைய பிச்சைக்காரர் வருகிறார்.
பிச்சை 1: அடடே, வாங்க..! எப்படி வந்தீங்க?
பிச்சை 2 : ஏன்? ரோட்டுல நடந்து வந்தேன்..!
பிச்சை 1: உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்..! உயிரோட வந்துட்டீங்களே?
பிச்சை 2 : ஏன் இப்படி கேட்கறீங்க?
பிச்சை 1: நாங்கள்ளாம் ரோட்ல நடந்து ரொம்ப நாளாச்சுங்க. குடிச்சிட்டு தாறுமாறா வண்டியோட்டிட்டு வர்றதால தற்கொலை பண்ணிக்கிறவன்தான் ரோட்டுக்குப் போறான். நாங்க பாதாள சாக்கடை வழியா நடந்து போயிடுவோம்..!
பிச்சை 2 : கப்படிக்காதா?
பிச்சை 1: நம்ம கப்புக்கு நல்லா இருக்கற பாதாள சாக்கடை நாறத்தானே செய்யும்?
பிச்சை 2 : எதனால இப்படி ஆச்சு?
பிச்சை 1: அதாவது தமிழ்நாட்டுல டாஸ்மார்க் வந்தது. அப்புறம் கோயிலுக்கு எதிர்ல, பள்ளிக்கூடத்துக்கு எதிர்ல, நெடுஞ்சாலைக்கு எதிர்ல டாஸ்மார்க் கொண்டு வந்தாங்க.. பிற்பாடு டாஸ்மார்க்குக்கு எதிர்ல டாஸ்மார்க் வந்தது. எங்கும் டாஸ்மார்க் மயம் ஆயிடுச்சு. குடிக்காதவனை கேவலமா நடத்த ஆரம்பிச்சிட்டாங்க..! மது விற்பனை இருநூறு ஆயிரம் கோடி ரூபாய் தாண்டிடுச்சு. கொஞ்ச நாள் கவர்ன்மெண்ட் நிறைய இலவசங்களை கொடுத்துச்சு. அப்புறம் அதை நிறுத்திட்டாங்க..! ஆளுங்கட்சி எதிர்கட்சி எல்லாம் குடும்பத்தோட வெளிநாடு போயிட்டாங்க. அங்கிருந்தே இப்ப ஆன்லைன்ல டாஸ்மார்க் வியாபாரம் நடக்குது. நாங்க பிச்சைக்காரங்களாயிட்டோம்...!
பிச்சை 2 : நீ லண்டன்ல விமான பைலட்டா இருந்தியேப்பா..!
பிச்சை 1: ஆமா..! குடிபோதையில கொஞ்சம் வித்தியாசமா ஓட்டினேன்..! வேலையை விட்டு தூக்கிட்டாங்க..!
பிச்சை 2 : என்ன பண்ணே?
பிச்சை 1: விமானத்தை ரோட்டுல ஓட்டினேன்..! காரை வானத்துல ஓட்டினேன்..! இத்தனைக்கும் பிளாட்பாரத்து குடிகாரங்க ஒருத்தன் மேல கூட வண்டியை ஏத்தல..! நியாயப்படி இந்தியாவா இருந்தா என்னை பாராட்டியிருப்பாங்க..! லண்டன் ஆளுங்களுக்கு பெருந்தன்மை போதாதுங்க..! சரி,சரி வராத விருந்தாளி வீட்டுக்கு வந்திருக்கீங்க..! என்ன சாப்புடறீங்க? விஸ்கியா? பிராந்தியா??
பிச்சை 2 : எனக்கு காபி கிடைக்குமா?
பிச்சை 1: காபி பிளேவர்ல விஸ்கி இருக்கு..! இங்க குழந்தைங்களுக்கு புட்டி விஸ்கி கூட கிடைக்குது..!
பிச்சை 2 : அரசாங்கம் ஒண்ணும் பண்ணலியா?
பிச்சை 1: ஏன் பண்ணாம? உலக வங்கியும் பன்னாட்டு நிறுவனமும் நிறைய மருந்து தயாரிச்சிருக்காங்களாம். அதை ஆராய்ச்சி பண்ண விளங்காத மனுசங்களா தமிழ்நாட்டு மக்களை உபயோகிக்க அரசாங்கம் ஒப்பந்தம் போட்டுடுச்சு. அதுலேயும் அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் வருது..! அப்பப்ப ஆராய்ச்சி பண்றவங்க இலவசமா பீட்சா, பர்கர் கொடுத்துடுவாங்க.. அது போதாதா?
பிச்சை 2 : ஹூம்... வாழ்க தமிழ்நாடு..!
முற்றும்