என் தேவதை கனவுகள்

ஒரு பக்குவமான வயதை எட்டிய நாளிலிருந்து எனக்கொரு குட்டி தேவதையைப் பற்றிய கனவு ஓன்று அவ்வப்போது வருவதுண்டு. எங்காவது என் வழியில் விழி உருட்டி குட்டி கம்மலை ஆட்டி குட்டி கொண்டை சரிய வெண் முத்துப்பல் காட்டி சிரிக்கும் பெண் குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கான என் தேவதை என் நினைவில் வந்து போவதுண்டு.

பெண் குழந்தை மேல் மட்டுமான ஆசையில்லை அது. எனக்கான என் தேவதை ஒருநாள் என் வாழ்வில் வருவாள். அவள் என்னை போலவோ என்னவன் போலவோ இருக்கு வேண்டும் என ஏனோ நினைத்ததில்லை.

என் தேவதை என் அம்மாவைப் போலிருக்க வேண்டும் என பேராசை கொண்டிருந்தேன். சாந்தமே உருவான என் அம்மா வடிவில் வரும் என் தேவதை அம்மாவை போல அமைதியாய் இல்லாமல் என்னை போல ஆர்பரிக்கும் இயல்போடு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னை விட நூறு மடங்கு துரு துரு குழந்தையாகவும் என் அம்மாவை விட ஆயிரம் மடங்கு அதிகம் பேச வேண்டும் என நினைத்த நாட்கள் எத்தனை!

ஆண் குழந்தைகளின் வால்தனத்தை ரசிக்காமல் இல்லை. அனால் பெண் குழந்தைகளின் அழகுக்கு முன் அது கொஞ்சம் எடுபடாமல் போவதை போல எண்ணம் எனக்குள். என் அக்கா பையனுக்கு ஆடை எடுக்கும் எண்ணம் அவ்வளவாய் வருவதில்லை. போய் எதை பெரிதாய் பார்ப்பது? எப்படியும் வேலைபாடில்லாத ஒரு சட்டை ஒரு பேன்ட். இதை தாண்டி அங்கு நான் எதை தேட என்ற எண்ணம்.

ஆனால் அதே அக்காவின் பெண் குட்டிக்கான ஆடை என்றால் வாங்க செல்லும் முன்னே ஒரு ஆர்வம் துளிர்க்கும். வண்ண வண்ண உடுப்புகள் என்ன பட்டு பாவாடைகள் என்ன மாடர்ன் வடிவ உடைகள் என்ன கற்கள் நூல் வேலைபாடுகள் என்ன! கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருக்கலாம் அந்த ஆடைகளை. ஓன்று எடுக்க நினைத்து இரண்டு ஆடைகளோடு கடையை விட்டு வெளியே வரும் நாட்களே அதிகம்.

திருமனத்துக்கு முன்னமே தேவதை கனவு கொண்ட எனக்கு திருமணம் ஆன பின் கேட்கவா வேண்டும் . இனிமையான இல்லறத்தின் பின் இயல்பாய் நாட்கள் தள்ளிப் போனபோது மனதுக்குள் வந்த குதுகலத்தோடு சேர்ந்து எட்டி பார்த்தது என் தேவதை கனவுகளும். என் மனம் தேவதையின் உருவத்துக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தது

சோதனை அட்டையில் இருகோடுகள் கண்டதும் பூரித்துப் போனேன். இல்லை இல்லை பூரித்துப் போனோம் சேர்ந்து. அடுத்த கணம் என் விரல்கள் என்னை அறியாமல் என் வயிற்றைதொடுகிறது. என் குட்டிமா எனக்குள் என என் உதடுகள் முணு முணுக்கிறது. என்னவன் முகத்தில் இதுவரை நான் கண்டிராத ஒரு உணர்வை கண்டேன் அந்த நொடியில் . வாழ்வின் அழகான தருணங்களில் அதுவும் ஓன்று.

என்னோடு வந்து கலந்த உயிர் ஒரு குட்டி தேவதையே என நம்பிய என் மனம் எப்போதும் என்ன குட்டிமா எனவே சிசுவையை கொஞ்ச ஆரம்பித்தது. என்ன குழந்தை பிடிக்கும் என என்னவனிடம் வினவினேன். ஆண் என சொல்லுவான் என்ற எண்ணத்தோடு தான் கேட்க ஆரம்பிதேன். என்னவனும் ஆண் குழந்தையைவிட பெண் குழந்தையே அதிகம் விரும்புகிறான் என தெரிந்ததும் என் தேவதை கனவுகள் அதிகமாய் சிறகு விரித்து பறக்க தொடங்கியது.

மாதங்கள் ஆக ஆக என் தேவதை குடியிருந்ததாய் நான் நம்பிய என் வயிறும் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக தொடங்கியது. பார்க்கும் சொந்தங்கள் எல்லாம் ஜோசியம் சொல்ல ஆரம்பித்தது. வயிறு பெரிதாக இருந்தால் நிச்சயம் பெண் என்றார்கள் எல்லோரும். கேட்கும் போதெல்லாம் எனக்கு ஒரு மைசூர் பாகுவை அப்படியே விழுங்கிய உணர்வு. அத்தனை தித்திப்பாய் மாறிப்போகும் மனசு.

என் தேவதை கனவுகளை போல பெரிதாக வளர்ந்த என் வயிறுக்கும் வலிக்கும் ஒரு முடிவு வந்த நாளன்று நான் மருத்துவமனை பிரசவ அறையில் வலியில் பெரிதாக கத்திக் கொண்டிருந்தேன். அந்த குட்டி விழிகளை விரைவில் காணப் போகிறேன் என்ற ஆறுதலை சுமந்தபடி என்னை தேற்ற இறை நாமத்தை தவிர வேறதும் இல்லா தனியறையில் ஏசுவே ஏசுவே என முனங்கலும் முணுமுனுப்புமாய் ஜெபமாலையை இறுக பற்றி கொண்டு நடந்த யுத்தத்தின் முடிவாய் வெளியே வந்தது குழந்தை .

எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் செவிலியரும் ஆண் குழந்தை என சொல்வது நன்றாக கேட்டும் நம்ப முடியாத நான் அந்த வலியிலும் ஆண் குழந்தையா என மீண்டும் கேட்டு உறுதி செய்து கொண்டு அமைதியாகிப் போனேன். அந்த பிரசவப் போராட்டத்தில் சோர்ந்து போன உடலைவிட ஏமாற்றத்தில் அதிகமாய் சோர்ந்து போன என் மனசுக்கு என்னமோ செய்தது. ஆனால் அது அதிக நேரம் நிலைக்கவில்லை.

இரு நிமிடத்தில் கழுவித் துடைத்த மாயக் கண்ணனை என்னருகில் கொண்டு வந்த போது நான் மயங்கித்தான் போனேன் அந்த விழியசைவில். என் தேவதை கனவுகள் அப்போது எங்கேயோ அந்த அறையின் ஒரு மூலையில் போய் ஒளிந்து கொண்டதோ என்னமோ தெரியவில்லை.

தாய்மையின் தளர்ச்சியும் மலர்சியுமாய் மகிழ்வாய் கடந்தது நாட்கள் . அழகாய் ஆனது என் ஒவ்வொரு நாட்களும் அந்த மாயக் கண்ணனோடு. தவழ்ந்த மழலை நடக்க ஆரம்பித்தது. ம் ம் சொன்ன மழலை அம்மா என்று சொல்ல ஆரம்பித்தது. தத்தி தத்தி நடந்த குழந்தை என் கை பிடிக்க மறுத்து ஓட ஆரம்பித்து சேட்டைகள் பண்ண தொடங்கியபோது அவன் வயது இரண்டு என்று சொல்லாமல் சொன்னது அவனின் ஒவ்வொரு குறும்புகளும்.

என் கண்ணனின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடின போதும் அதே பூரிப்பு. அவனை பிரசவித்த நாளைய நினைவுகளின் சாரலோடு அவன் கன்னத்தில் பதித்த முதல் முத்தத்தின் ஈரத்தை நெஞ்சில் சுமந்தபடி அவனை தூக்கி இறுக்கமாய் அணைத்து முத்தோடு சொன்னேன் அவனுக்கு பிறந்த நாள் என்று. பிஞ்சு இதழ்கள் பதிலாய் ஒரு முத்தம் தந்து விட்டு விளையாட ஓடியது.

இது நாள் வரை எங்கேயோ தொலைந்து பொய் இருந்த என் தேவதை கனவுகள் அன்றைய இரவில் லேசாக எனக்குள் எட்டி பார்க்க ஆரம்பித்தது குறு குறுவென என் நெஞ்சை எதோ செய்தபடி. என் கண்மணி எப்போது வருவாள் என்று ஏங்க தொடங்கியது. முதல் குழந்தை கண்ணன் ஆனதால் இரண்டவாது கண்மணியாகவே இருக்க வேண்டும் என்று அன்றிலிருந்து பிராத்தனை செய்ய ஆரம்பித்தேன்.

தனியறையில் நாங்கள் மூவரும். நிலவை விட அழகாய் மென்மையாய் தெரிந்தது துயின்று கொண்டிருந்த மாயக் கண்ணனின் மலர் முகம். என்னங்க நாம இனி இரண்டாவது குழந்தைய பற்றி யோசிக்கலாமா என என்னவனிடம் மெல்லமாய் சொன்னேன். சற்றும் எதிர்பாராத மறுப்பு வந்தது அங்கிருந்து . இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று சொன்னதை ஏனோ ஏற்கவில்லை என் மனசு. எனக்குள்ளிருந்து வெளியேறிய பெருமூச்சு இரவின் அமைதியில் பெரும் இரைச்சலாய் தோன்றியது எனக்கு.என் தேவதைக்கான காத்திருப்பு அதிகரித்து கொண்டே போனது.

வேகமாக ஓடிய நாட்களின் நடுவே ஒரு சமயம் எனக்கு நாட்கள் தள்ளிப் போனது எதிர்பாராமலே.
ஒருவேளை அதுவாக இருக்குமோ என நினைக்கும் போதே மனம் துள்ள ஆரம்பித்தது. சோதனை செய்ய ஒரு வாரம் காத்திருப்பது ஏனோ கடினமாக தோன்றியது. பின் அது தான் என சோதனை முடிவு உறுதி செய்தததும் என் தேவதை எனக்குள் வந்துவிட்டதாய் நினைத்து ஆனந்த கூத்தாடியது என் மனசு. முதல் குழந்தைக்கு கிடைக்கும் வரவேற்பும் பூரிப்பும் இரண்டாவது குழந்தைக்கு இயல்பாய் கிடைப்பதில்லை என சுற்றம் சொல்லிட் தந்தது.

ஆனால் என் இதயம் மட்டும் இப்போதே என் தேவதையை வரவேற்க சிகப்பு கம்பளம் கொண்டு காத்திருந்தது. குட்டிமா என கூப்பிட ஆரம்பித்தேன். என் குட்டி கண்ணனிடம் நம் வீட்டுக்கு இன்னும் ஒரு குட்டி வருவதாய் சொன்னேன். வேண்டாம் என்றான். சில நேரம் அவன் தான் குட்டி குழந்தை என்றான். தடுமாறிய நான் கொஞ்சம் யோசித்து முதல் செல்ல குட்டி இங்கிருக்கு அம்மா கிட்ட. இரண்டாவது செல்லல குட்டி அம்மா வயிற்றில் வந்திருக்கு என்று சொல்லிப் பார்த்தேன் ஒரு நாளில். அவனை முதல் என்று சொன்னதாலோ என்னவோ அன்றிலிருந்து மகிழ்வாய் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தான் புது வரவை.

உன் தங்கச்சி என தான் சொல்லி கொடுத்தேன் என் kannanukku. ஒருவேளை தம்பியாய் இருக்குமோ என தவறியும் எண்ணவில்லை இந்த மனசு. கண்ணன் இங்கே irukkaan. கண்மணி எங்கே டா எனக் கேட்டால் அவன் என் வயிற்றைக் காட்டி விளையாடும் அளவுக்கு இயல்பானது எங்கள் மூவர் கூட்டணி.

தங்கச்சிக்கு என்ன விளையாட்டு கொடுப்ப எனக் கேட்டால் ஏதும் தரமாட்டோம் என சொன்னவன் அப்புறமாய் மெல்ல பெரிய விளையாட்டு அவனுக்கு என்றும் சின்னது எதாவது தங்கைக்கு தருவோம் என மழலை கொஞ்ச சொல்லும் அளவுக்கு பக்குவப்பட்டான். நிஜமாக பாப்பா வந்த பின் கொடுப்பானோ என்னவோ சொல்லவாது செய்கிறானே என மகிழ்ச்சி கொண்டேன் நான்.

ஐந்தாவது மாதத்தில் என்ன குழந்தை என தெரிந்துவிடும் என்பதால் பார்ப்பவர்கள் எல்லாரும் என்ன குழந்தைன்னு பார்த்தாச்சா என கேட்டு மெல்லமாய் என்னை சீண்டி விட்டார்கள். நாமும் பார்க்கலாமோ என தோன்றியது. நமக்கு பொண்ணு தான் என்று வேற கேட்பவர்களிடம் சொல்லி சிரிப்பேன். எப்படி சொல்றீங்க என தொல்ழிகள் கேட்டால் அது அப்படி தான் என்பேன். ஏனோ சந்தேகமில்லா நிச்சயம் கொண்டேன் அந்த நினைப்பில்.

எழுதியவர் : யாழினி v (6-Aug-15, 10:13 pm)
சேர்த்தது : யாழினி வ
பார்வை : 798

சிறந்த கவிதைகள்

மேலே