யாரோவொருவனுக்கு - உதயா

வெண்ணிலவும் வெண்மேகமும்
கண்ணாம்பூச்சியாடும் நேரத்தில்
என் தாய் அறியேன்
என் தந்தை அறியேன் என்று
அவன் கதறிக் கொண்டும் இருக்கலாம்

அவன் ஈன்றவளாலே
யாரோவொருவனாக
விடப்பட்டு இருக்கலாம்

இல்லை பணப்பேய்களின்
இரைகளில் இருந்து மிஞ்சி
அவன் யாரோவொருவனாக
மாறி இருக்கலாம்

இல்லை சாதியெனும்
இச்சை செயலினால்
அவன் யாரோவொருவனாக
திசை மாற்றப்பட்டு இருக்கலாம்

இல்லை விதியின் சூழ்ச்சியால்
அவன் யாரோவொருவனாக
ஆக்கப்பட்டு இருக்கலாம்

அவன் யாரோவொருவனாக இருந்து
யார் இவன் என்று பலர் எண்ணும் படி
வாழ நினைத்தும் இருக்கலாம்

அந்நினைவலைகளின் முதல் முயற்சியில்
தன்னுள் கல்வியெனும் போதிமரத்தினை
துளிர்விடச் செய்து இருக்கலாம்

அத்துளிர்கள் ஒவ்வொன்றாய்
ஒவ்வொரு கல்வி நிலையத்தின்
நுழை வாயிலாலே
கிள்ளி எறியப்பட்டு இருக்கலாம்

அவன் கரங்கள்
உதவி நாடி
பலரின் காலினை
பற்றி இருக்கலாம்

பலரின் வார்த்தைகள்
கருவேல முட்களாகி
அவன் மனதினை
கீறி இருக்கலாம்

அவன் வாழ்வில்
எதோ ஒரு முனையைப் பற்றி
உயர்ந்துவிட எண்ணி

அழுக்கு துணியுடன் கூடிய
குப்பை பொறுக்கும் வேலையை
அவதாரமாக்கி இருக்கலாம்

சில நேரங்களில்
அவன் சிந்தும் கண்ணீருக்கு
ஆயிரம் அர்த்தங்களும் இருக்கலாம்

அவன் ஓர் நாளில்
உலகின் சிறந்த மனிதனாக
பரிணாமம் அடைந்து இருக்கலாம்

அவனுக்கு உதவ மறுத்த
வள்ளல்களும்
அவன் பசிக்கு ஒரு பருக்கை
உணவிடா உயர் உள்ளங்களும்

நாளை அவனிடத்திலே
கையேந்தும் நிலைக்கு
அவன் வளர்ந்தும் விடலாம்

மனிதத்தை கொன்று
மனசாட்சிக்கு சமாதி கட்டி
பணத்திற்காக மட்டும்
பல ரூபம் தரிக்கும்
உயர் எண்ணம் கொண்ட
மக்களே உலகின் வாசிகளே

நீங்கள் யாருக்கும்
உதவ மறுத்தாலும்
பரவாயில்லை

ஆனால் எங்கும் எப்பொழுதும்
எந்நிலையிலும் எவரையும்
உதாசனப்படுத்தி
புண்படுத்திவிடாதீர்கள்

ஏனெனில் அவர்களிடத்தில்
இன்னும் ஆரா ரணங்கள்
நிறையவே உள்ளது

எழுதியவர் : உதயா (11-Aug-15, 5:14 pm)
பார்வை : 86

மேலே