இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 5

நன்றென்ப கண்ணப்பர் செய்கரும நாடுங்கால்
அன்றென்ப தக்கனார் செய்த வறவினை
ஒன்றும் மனத்தியல்பாற் சொல்லு முறுவினையும்
என்றிவை மாற வியல்பு. 5

பதவுரை:

நாடுங்கால் - ஆராய்ந்து பார்ப்பவர்கள்

சொல்லும் உறுவினையும் - வாய்மொழியும், செய்கின்ற செயற்பாடுகளும்

ஒன்றும் மனத்தியல்பால் - ஒன்றித்துப் போகின்ற மன இயல்பின் காரணத்தை வைத்து

கண்ணப்பர் செய்கரும(ம் - (சிவலிங்கத்தின் மேல் கால்களை வைத்தவனாகத் தனது கண்களைப் பிடுங்கி சிவலிங்கத்தின் மேல் அப்பிய) கண்ணப்ப நாயனாரின் காரியத்தை

நன்றென்ப - நல்லதென்றும்

தக்கனார் செய்த அறவினை - பிரசாபதிகளில் ஒருவன் எனப்படுபவனாகிய தக்கனின் யாக காரியங்களாகிய நற்காரியங்களை

அன்றென்ப - (கண்ணப்பனுடையதைப் போல சிறந்த) நல்ல காரியமல்ல என்றும்

என்றிவை மாற - இவ்வாறாக மாற்றிக் கூறும்படியான நிலைகள் ஏற்படுவது

இயல்பு - சம்பவிக்கக் கூடியதே!

விளக்கவுரை:

ஆராய்ந்து பார்ப்பவர்கள், வாய்மொழியும், செய்கின்ற செயற்பாடுகளும் ஒன்றித்துப் போகின்ற மன இயல்பின் காரணத்தை வைத்து, (சிவலிங்கத்தின் மேல் கால்களை வைத்தவனாகத் தனது கண்களைப் பிடுங்கி சிவலிங்கத்தின் மேல் அப்பிய) கண்ணப்ப நாயனாரின் காரியத்தை நல்லதென்றும், பிரசாபதிகளில் ஒருவன் எனப்படுபவனாகிய தக்கனின் யாக காரியங்களாகிய நற்செய்கைகளை கண்ணப்பனுடையதைப் போல சிறந்த நல்ல காரியமல்ல என்றும் இவ்வாறாக மாற்றிக் கூறும்படியான நிலைகள் ஏற்படுவது சம்பவிக்கக் கூடியதே என்பதாகும்.

இதனால் ஆராய்ந்து பார்ப்பவர்கள் வெறும் செயலை மட்டுமே வைத்து ஒருவரின் செயல்களைப் பண்பினை எடை போட மாட்டார்கள்; மாறாக ஒருவரின் மனத்தாலும் செயலாலும் ஒன்றிய நிலையை வைத்தே அவரை மதிப்பிடுவார்கள் என்பது வலியுறுத்தப்பட்ட்து.

(தக்கனின காரியத்தை ‘தக்கன் பெருவேள்வி தன்னில்’என்ற தேவாரப்பாடல்.468,2 ல் காணலாம்)

நாடுதல் என்பது ஆராய்தல் என்ற பொருளில் - நாடாது நட்டலில் கேடில்லை-என்ற 791-ஆவது குறள் மூலம் அறியலாம்)

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. 791 நட்பாராய்தல்

ஒருவரைப் பற்றி நன்கு ஆராயாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை. ஏனென்றால் நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். துன்பங்களும் அதிகம்.

கண்ணப்ப நாயனார் சரித்திரம் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்..என்ற திருவாசகப் பாடல் ..10,4 இன் மூலம் அறியலாம்.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ் சண்முகனார் (13-Aug-15, 9:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 122

மேலே