தெய்வம் சான்ற திறல்- 9

தெய்வம் சான்ற திறல்

ஒரு மறையியல் வல்லுநர் அவரது விடுமுறை நாட்களில் மலைமீது ஏறிச் சென்று பனிச் சறுக்கு விளையாட்டு விளையாடுவது வழக்கம். ஒரு நாள் அவர் அவ்வாறு சென்ற பொழுது கட்டுப்பாடின்றி ஒரு அதல பாதாளத்தில் விழுந்து கொண்டு இருக்கும்போது கையில் கிடைத்த மர வேர் ஒன்றினைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தார். எவ்வளவுதான் அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முயன்றாலும் அவரால் மேலே ஏற முடியாத நேரத்தில் அவர்

‘யாராவது இருந்தால் என்னைக் காப்பாறுங்களேன்’

எனக் கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தார். கைகள் வலிக்க வலிக்க தொங்கிக் கொண்டு இருந்த அவரது குரலைக் கேட்டு அவரைக் காக்க எண்ணிய கடவுள் தன்னை மறைத்துக் கொண்டு தனது குரலை மட்டும் அவர் கேட்கும்படி இவ்வாறு கூறினார்.

“நான்தான் கடவுள். நீ பிடித்து இருக்கும் பிடியை விட்டு விடு. உன்னை நான் தாங்கிக் கொள்வேன்.”

“தயவு செய்து வேறு நல்ல வழியில் என்னை காப்பாற்றுங்கள்” என அவர் மீண்டும் கதறினார். கடவுள் மீண்டும்,

”நான் கடவுள். என் மீது முழு நம்பிக்கை வைத்து நீ குதித்து விடு. உன்னை நான் தாங்கிக் கொள்வேன்” என்றார். ஆனால் அந்த நபரோ,

“அங்கு வேறு யாரவது இருந்தால் என்னைக் காப்பாற்றுங்களேன்” எனக் கூப்பாடு போடலானார்.

கடவுளே வந்து நம்மைக் காக்க நினைத்தாலும் நாம் அவரை நம்பாமல் உதாசீனம் செய்வதே வழக்கமாகி விட்டது. ஆயினும், நமக்கு சரியான நேரத்தில் வந்து உதவி செய்பவர்களை ‘கடவுள் மாதிரி வந்து உதவி செய்தீர்கள்’ என நாத்தழுதழுக்கக் கூறுகிறோம். அப்போது நமக்கு உதவி செய்வது கடவுள் என்றால் அவர் நேரிடையாக வராமல் பிற மனிதர் வடிவில் செயல்படுகிறார் என்பதையும் நாம் நம்ப மறுக்கிறோம். எந்த நேரத்திலும் நாம் கடவுளை அழைத்தாலும் நமக்கு உதவி செய்திட அவர் வர வேண்டும் என சாதாரண மனிதர்களாகிய நாம் நினைக்கிறோம். கடவுளை நமது் ஊணக் கண்களால் கண்டால் நாம் இறந்து விடுவோம் என்பது கூடத் தெரியாமல் கடவுள் என ஒருவர் இருந்தால்தானே அவர் வர முடியும் என நையாண்டி செய்பவர்களும் இருக்கிறார்கள். கண்ணுக்குப் புலனாகாத கடவுள் அவரது குரலை அனுப்பினால் கூட நாம் நம்பத் தயாராய் இல்லை. ஆனால் அவரை நம்பித்தான் ஆக வேண்டும். அது நமது கடமை. நம்மை அவர் காப்பார் என நம்ப வேண்டும். காப்பது அவர் கடமை என ஒருவர் ஒருவர் மீதான பரஸ்பர நம்பிக்கையில்தான் ஆத்மா-பரமாத்மாவின் உறவு ஆகிய ஆன்மிகம் செழிக்கும். ”நம்பினோர் கெடுவதில்லை” என்பது நான்கு மறை தீர்ப்பு

எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் நான் தொழுதாலும் என்னைக் காத்தருள வேண்டியது உன் கடமை என்று இறைவன் அருள் பெற அவர் மீது நம்பிக்கை கொண்டு வழிபட வேண்டும் என்று திருக்கழுமல மும்மணிக் கோவை பின்வரும் பாடல் மூலம் இயம்புகிறது.

இயன்றதோர் பொழுதின் இட்டது மலரா
சொன்னது மந்திரமாக என்னையும்
இடர்பிறப்பு இறப்பெனும் இரண்டின்
கடற்ப டாவகை காத்தல் நின் கடனே

அப்படியானால் நம்பிக்கை என்றால் என்ன என்பதைப்பற்றி பார்ப்போம்
நம்பிக்கை என்பது, எது உண்மை என்று நமக்கு உறுதியாகத் தெரிகிறதோ அதனை விசுவசிப்பது ஆகும். பெரும்பாலான நேர்வுகளில், காணாமல் இருப்பவையே சாட்சியங்களாகப் சொல்லப்பட்டாலும், இதுதான் உண்மை என அந்த சத்தியத்தில் திடமாய் உறுதியாய் நின்று நம்புவது ஆகும்.

’நான் உன்னை நம்புகிறேன்’ என மனிதர் ஒருவர், மற்றொரு மனிதரைப் பார்த்து கூறுவது போலன்று இது. நம்புவது என்பது விசுவசிப்பது என ஆகாது. ஒரு நம்பிக்கை என்பது விசுவாசம் ஆவதற்கு அது எது உண்மையிலும் உண்மையோ அதனை ஒளி காட்டி கொடுக்க வேண்டும். நமது முன்னோரின் வேத புத்தகங்களிலும், சுவடிகளிலும், விசுவசிப்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டுமே போதும் என்பதற்கு சான்றுகள் கூறப்பட்டு உள்ளன. சான்றுகளை சேகரிக்க கால அவகாசம் தேவை என்றோ, நம்மால் அதற்காகக் காத்திருக்க முடியாது என்றோ நாம் வாதிட்டால் உண்மையான உறுதிப்பொருள ஆகிய பரம் என்பது பற்றி பிறர் சொல்வதை கேட்கவும் நம்மால் முடியாது. இதனால்தான், ’சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை’ என சொல்லும்போது ஞான சூனியமாக அம்மனிதன் அவமதிக்கப்படுகிறான். மனிதன் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும், சான்றோனாய் இருப்பவன் ஞானம் நிறைந்த மனிதன் ஆக இருக்க வேண்டும் எனில் கடவுளை நம்ப வேண்டும்.

கடல் மீது இயேசு பிரான் நடந்து வருகிறார். அதனைப் பார்த்த அவரது சீடர்களுள் ஒருவராகிய, பின்னாளில் பிரதம சீடர் ஆகிய பேதுரு என்பவர்
, “ஆண்டவரே, நானும் உம்மைப்போல நடக்க முடியுமா”
எனக் கேட்ட பொழுது,
“வா”
என இயேசுவும் அழைக்கிறார். அவ்வாறு நடந்த பேதுரு, திடீரென்று அமிழ்வதாய் எண்ணி தன்னைக் காப்பாற்றும்படி கூக்குரல் கொடுக்கும்போது,

”நம்பிக்கை இழந்ததனால் உனக்கு இப்படி ஆயிற்று”

எனநம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயேசு கூறுவதை திரு விவிலியத்தில் காண்கிறோம். மேலும் எங்களது நம்பிக்கையை அதிகமாக்கும் எனக் கேட்ட அவரது சீடர்கட்கு அவர்,

“கடுகு அளவு நம்பிக்கை உங்களிடம் இருந்தால் போது, இந்த முசுக்கொட்டை மரத்தை வேரோடு பெயர்ந்து கடலில் விழு என நீங்கள் கூறினால் , அது உங்கட்கு கீழ்ப்படியும்" (லூக்17:5)
என்றார்.

கி.பி. 213ல் நியூ செசாரியாவில் பிறந்து கி.பி. 270 இல் ஆயராக மரித்த அற்புதங்கள் செய்யும் கிரகோரி எனும் கிறிஸ்த மத குருவானவர் இத்தகைய நம்பிக்கை உண்மையிலேயே உண்மைதானா என நாம் சோதித்துப் பார்ப்போம் எனக் கூறி, அவரது தேவாலயம் கட்டும் பணிக்கு இடைஞ்சலாக அங்கு கிடந்த குன்று போல் இருந்த பெருங் கல் ஒன்றினைப் பார்த்து, ”கடலில் போய் விழு” எனக் கூறியபோது அது நிகழ்ந்தது என வரலாறு கூறுகிறது.

கடவு்ள் மீது நம்பிக்க வைத்த ஆபிரகாம் தன் ஒரே மகனை வெட்டத் துணிந்தபோது அவரைத் தடுத்து ஆட்கொண்ட கடவுள், அவரை பலவாறு ஆசிர்வதித்ததைப் போலவே, சிறுதொண்டர் வரலாற்றிலும், பிள்ளைக் கறி அமுது கேட்ட சிவனடியார் கோலத்தில் வந்த இறைவனுக்கு, தம் சொந்த பிள்ளையை வெட்டிக் கறி அமுது படைத்த போது அப்பிள்ளை மீண்டும் உயிருடன் வந்தது என்ற நிகழ்வுகள் நம்பிக்கையின் ஆழ அகலங்களை நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

இவர்தான் இறைவன் என்று ஒரு சமயத்தையும் குறிப்பிடாத திருவள்ளுவர், கடவுள் வாழ்த்தில், இறைவனை எண்குணத்தான் எனக் குறிப்பிடுகிறார். இந்த எட்டு குணங்கள் யாவை என்பதை கல்லாடப் பாடல் எண் 89 பிட்டுப் பிட்டு வைக்கிறது.

முழுதுணர் ஞானம் எல்லாம் உடைமை
முழுது அனுக்கிரகம் செழுபரம் அநாதி
பாசம் இலாமை மாசு அறு நிட்களம்
அவிகாரக் குறி ஆகிய தன் குணம்
எட்டும் தரித்து.

ஆக இந்த எண்குணத்தானை நம்புவது நமக்கு கடினம் அல்ல. ஆயினும் யார் உண்மையான கடவுள் என்ற குழப்பம் இங்கு உருவாகலாம். அதற்கு பதில் அளிப்பது போல்,
யார் யார் எந்த வடிவில் வழிபட்டாலும் அவ்வழிபாடு சிவனுக்கே ஆகும் எனும் கருவூர்த் தேவரின் திருவிசைப்பாவில்,

சுருதி வானவனாம் தி்ருநெடு மாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகவுயிர்க் கமுதாம்
எருது வாகனனாம் எயில்கள் மூன்றெரித்த
ஏறு சேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்ட சோழேச்சுரத்தானே.

எனவே, பெருந்தேவ வழிபாட்டில் அவரவர் தத்தம் தெய்வங்களை வழிபட்டு, நன்னெறிப் பாதையில் நடந்தோமெனில், இறைவன், நம்முள் உறைபவன், நமக்கு எல்லா உதவிகளையும் செய்வான் என்பதும், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்பதை நம்புவோர்க்கு எல்லா ஆசைகளையும் இவ்வுலகில் இறைவனே நிறைவேற்றித் தருவார் என்பதும் பல சமயங்களில் ( இரு பொருளில்வாசிக்கவும் ) நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆசைகளை துறக்க வேண்டும் என பல சமயங்களும் கூறுகின்றனவே என வாதிடுவோர்க்கு, திருக்களிற்றுப் படியார் செய்யுள் 16-20. அனைத்தையும் துறந்த இடமே சிவன் என்று பொருள் தருகிறது.

ஒன்றன்று இரண்டன்று உளதன்று இலதன்று
நன்றன்று தீதன்று நானன்று—நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று
தலையன்று அடியன்று தான். .

எது சமயம், அது கூறும் உண்மைப்பொருள் எது, எது சாத்திரம், அதன் பொருள் இதுதான் சாத்திரம் என்று எது வரையறை செய்து வேறொன்றல்ல என மறுத்துச் சொல்கிறதோ அது அல்ல என வற்புறுத்திக் கூறும் பாடல், சிவஞான சித்தியாரின் சுபக்கம் 8—13 ஆம் பாடல்னாம் உண்மையான கடவுளை தெளிந்து தேர்வு செய்வதற்கு உதவி செய்கிறது. கடவுளை நாம் அறிந்து கொண்டோம் எனில் அவரது தொண்டர் என ஆகி விடுகின்றோம். அந்த தொண்டர், நம்பர் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெரிய புரானத்தின் 4158 ஆம் பாடல் இவ்வாறு எடுத்து விளக்குகிறது.

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையோர் தொண்டராம் குணமிக்கார்.

கடவுள் மீது நம்பிக்க வைத்து செம்மையான பக்தியுடன் வாழும் அவனது அடியார்களை கடவுள் என்றும் கைவிடுவதில்லை. இவ்வாறு கடவுள் நம்பிக்கையில் நிலையாக நிற்பதை “திரு நின்ற செம்மை” என சொற்பிரயோகத்தை சுந்தரப் பெருமான் அருள்வாக்காக அருளினார்.. தமிழில் திரு என்ற அடைமொழியை நாம் சாதாரணமாக ஒரு நபரை மரியாதையாகக் குறிப்பிடப் பயன்படுத்துகின்றோம். வடமொழியில் ஸ்ரீ என்பது இறைவனைச் சார்ந்த என்ற பொருளாகின்றது. இதனைத் தமிழில் திரு எனக் குறிப்பிடுகின்றோம். இந்த திரு எனும் சொல்லுக்குப் பொருள் கூற வந்த பிசிராந்தையார், “ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்” எனக் கூறினர். இதற்குப் பொருள் என்னவென ஆயுங்கால், ஆராய்ந்த நூல்களைக் கற்றதன் பயனாய் மனம் பக்குவப்பட்டு ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடக்கமாக இருக்கும் படித்தவர்” என்பது ஆகும். ஆணவ மலம் நீக்கப்பட்ட மிகப் படித்த மனிதர் என்றும் கூறலாம்.

திரு என்ற சொல்லுக்கு பிசிராந்தையாரின் பொருளை ஏற்காத தமிழ்த் தென்றல் திரு. வி. க அவர்கள், “கண்டோரால் விரும்பப்படும் தன்மை” என்ற எளிய பொருளினை எடுத்தியம்பினர்.. ஆன்மிக நோக்கில் புகலுங்கால், திரு என்பது தெய்வம் சார்ந்த ஒரு வகை மனநிலை ஆகும். இந்த திரு என்ற சொல்லை ஊர் பெயருக்கு முன் வைத்து சுமார் 140 திருத்தலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் சமமாகப் பாவிக்கும் பக்குவப்பட்ட மன நிலை அல்லது மனச் செம்மை என்கிறோம். இந்த மனச் செம்மையினை திரு என்பதற்கு ஆன்மிக பொருளாக கொள்ளுதல் சாலச் சிறந்தது. ஏனெனில் இவ்வகை மன நிலை இறைத் திருவருளால், அருளனுபவத்தால் அடியவர்க்கும் தொண்டர்க்கும் அவர்கள் இறைவன் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கை காரணமாக அருளப்படுகிறது. இதனால்தான், இறைவனும் தொண்டரும் தொண்டு செய்யும் ஒரே குலத்தவர் என்பதை.

படமாடக் கோயிற் பகவற் கொன்றீயில்
நடமாடக் கோயிற் நம்பர்க் கங்காகா
நடமாடக் கோயிற் நம்பர்க் கொன்றீயில்
படமாடக் கோயிற் பகவர்க் கதாமே

எனும் திருமந்திரப் பாடல், இறைவனை நம்புவோர்க்கு ஒன்று செய்தால் அது இறைவனுக்கே செய்த உதவி போலாகும் எனத் தெளிவாகக் கூறுகின்றது.

இவ்வாறு ஆன்மிக மனச் செம்மை நம்புவதால் மட்டுமே வரும் என்பதாலும், இத்தகைய மனச் செம்மையை அடைவதற்கு மனிதற்குப் பெரிதும் உதவும் பக்தி நூல்களை உரிய முறையில் எடுத்துக் கூறும் அரிய நூல்களை திருமுறை நூல்கள் எனப் பாகுபடுத்தி வைத்தனர் நம் முன்னோர். முறை என்பது முறைப்படுத்தும் கருவி என்பதால் இந் நூல்களைப் படிப்போர், இறை நம்பிக்கை கொண்டோர், நல்லொழுக்க நெறிகளை எல்லா மக்கட்கும் அறிவுறுத்தி தாம் வாழும் இவ்வுலகினை நல்வழிப்படுத்தும் நற்பணியில்(கடவுட் பணியில்) ஈடுபடுகின்றனர்.

(வளரும்)

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (13-Aug-15, 12:33 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 229

சிறந்த கட்டுரைகள்

மேலே