போதைக்காரன்-சந்தோஷ்

போதைக்காரன்.
----------------------
ஒரு நட்சத்திர
மது அருந்தும் விடுதிக்கு
செல்கிறேன்.
விஸ்கி பானம் ஒன்றை
வரவழைக்கிறேன்.
அழகான கண்ணாடிக் கோப்பையுடன்
முந்திரிப் பக்கோடா
தோலுரிக்கப்பட்ட வேர்கடலை
மிளகாய்தூவிய வெள்ளரிக்காய் துண்டுகள்
மொறுமொறுப்பாக வறுத்த மீனுடன்
விஸ்கி குடுவையும்
உயர் ரகச் சோடாவும்
என்னிருக்கையின் எதிரே வைக்கப்படுகிறது.

அகன்றத் தொலைக்காட்சித் திரையில்
செய்தி சேனலொன்று காட்சிப்படுகிறது
பார்த்தேன்..
மதுவிலக்குக் கோரி ஆர்பாட்டம்.
மாணவர்கள் போராட்டம்.
போலீசார் தடியடி..!
மனம் பொங்கியது..
கண்ணாடிக் கோப்பையை நிமர்த்தி வைத்து
விஸ்கியும் சோடாவும்
நேர்த்தியான சதவீதத்தில் கலக்கிறேன்.
சிந்தனையோட்டம் மூளையில் குடைகிறது.
ஒரு கையில் கோப்பையை எடுத்து
நன்றாக முகஞ்சுளித்து பருகத்தொடங்கினேன்.
மறுகையில் பேனாவையும் எடுத்து
மதுவிலக்கு அமல்படுத்தாத அரசைக்
கண்டித்து மூன்று வரியில்
நச்சென்று ஒரு தாளில் கவிதையெழுதி
எனது போராளித்தனமான
ஜனநாயகக் கடமை எழுதியவாறு..
முந்திரி இத்யாதிகளை மென்று தின்றேன்..

மீண்டும் பலசுற்று விஸ்கி பருகலுக்குப்பின்
எழுதியத்தாளை நுகர்ந்துப் பார்த்தேன்.
கொஞ்சம் துர்நாற்றம் அடித்தது..ஆனாலும்
அதுவும் தேவையாகப்பட்டது.

முடிவில், குடித்தற்கான கட்டணம் செலுத்திவிட்டு
கவிஞனெனும் முகமூடி அணிந்துக்கொண்டு
மதுவிடுதியை விட்டு வெளியேறி
எழுதியத்தாளை வாரயிதழுக்கு அனுப்பினேன்.
வெளியான நாளில் ஏறியது போதை..
புகழ் போதை...!

**
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (14-Aug-15, 5:21 pm)
பார்வை : 125

மேலே