தாய் மண்ணே வணக்கம் -கார்த்திகா

அன்று அவர்தம்
கண்ணீரில் உதிரம் சொட்டியது

சுதந்திரம் எங்கள் மூச்சென
முழங்கிய இளைஞர்கள்
உயிர் ஈந்து நாடு காத்தனர்

இன்றைய அவசர உலகமும்
இணையதளமும்
கட்டிப் போட்ட
என் இளையசமுதாயமே
நீ விழித்தெழு!

இரத்தத்திற்கு இரத்தமென
போராடிய நேதாஜியும்
அகிம்சையின் காந்தியும்
மண்ணிலொரு விண்வெளி கண்ட
கலாமும் பிறந்த இதே மண்ணில்

கலாச்சார சீரழிவும்
அரசியல் சகதிகளின் குமட்டலும்
இளைஞனின் நாசியில் ஏறவில்லையோ

மெய்தந்த தாய்மையும்
உயிர்கொண்ட பெண்மையும்
சிதறி வீழ்வதை உன் செவிகள்
சப்திக்க மறந்திட்டதோ

பசியுற்ற சிசுக்களாய்
பாசம் வற்றிய வெறுமைகண்டு
நிழல் தேடும்
பெற்ற தெய்வங்களை
முதியோராக்கி தவிக்க விடல் கண்டு
நெஞ்சு கொதிக்குதடா

அந்நியனாம் வெள்ளையனைத்
துரத்தியடித்த இந்(த)திய தேசத்தைக்
கொள்ளையடிக்கும் வல்லூறுகள்
வளரிளம் தலைமுறைகளின் சுடரொளி
தீக்கங்குகளில் எரிந்தழியட்டும்

அடைந்த மனதை
கனவுத் திறவுகோளில்
மாசற்ற ஒளியூட்டு

செந்நீரால் உயிர்த்த
விடுதலையின் நற்பலனாய்
எழுச்சிமிகு இந்தியாவிற்கு வித்தாய்
விதையூன்றிய கைகளின்
ரேகைகள் விருட்சங்களாய் விரியும்
இன்றைய உலகினில்!!

எழுதியவர் : கார்த்திகா AK (15-Aug-15, 3:33 pm)
பார்வை : 620

மேலே