மது கோட்டிக்காரன்

இலையுதிர்க் கால
மரமென
அங்கம் தெரிய
வீழ்ந்து கிடப்பவனின்
விலகிய வேட்டியிலும்
தெறித்துச் சிவக்கிறது
போதைத் திரவம்.

ஆமை ஓட்டுக்குள்
இழுத்த முகமாய்
குப்புறக் கிடந்த முகம்
பார்க்கக் காணாது.

அடிபட்ட பறவையென
சட சடக்கும் அவன் உடல்
வீதியின்
அழுக்குப் புழுதியேறி
நாறுகிறது.

சற்று முன்
விழுங்கிய உணவை
வெளித் தள்ளி...

அழுவது போலவே பேசும்
அவனை..
நெருக்கித் தள்ளிப் பார்க்கிறது
கும்பல்.

அருகே...
அலறித் தவித்து அழும்
அந்தச் சிறு பையன்
அவனின் குழந்தையாய்
இருக்கக் கூடும்.

கழண்ட நூற்கண்டென
கலைந்த
தன் அம்மாவின் இருப்பை,
தன் வாழ்வை...

வீழ்ந்து கிடப்பவனோடு
எப்படி இணைப்பது
எனத் தெரியாத பதற்றத்தில்
இருக்கலாம் அவனின்
ஆறாத வேதனை.

உலர்ந்த பிணமென
கிழே கிடப்பவனுக்கு
அருகில் இருந்த பாட்டிலில்

பொருள் தெரியாத மொழியில்
இருந்திருக்கக் கூடும்...
"குடி குடியைக் கெடுக்கும்"
என்ற வாசகம்.

அவன்...
அப்பாவியா,
குற்றமுள்ளவனா,
அவனின் கர்மாவா,
கருமமா...

எதுவும்
அந்தக் கண்ணாடி பாட்டிலில்
எழுதி இருக்கவில்லை.

பிறகு வந்த
ஊடகச் செய்திகளில்...

அரசு
தள்ளாடும் வருவாயை...
அதிகரிக்க முயற்சிக்கும்

என்பதைப் படிக்க நேர்ந்த பின்...

ஏனோ...
எனக்கு
இந்தச் சுதந்திரத்தைக்
கொண்டாடப் பிடிக்கவில்லை.

எழுதியவர் : rameshalam (15-Aug-15, 11:44 am)
பார்வை : 114

மேலே