ஜனநாயகம்

எது ஜனநாயகம் ?

மக்களின் கருத்திற்கு
மாற்று நெருக்குதல் தரும்
அரசாங்கத்தின் அதிகார ஆட்சியா
ஜனநாயகம் ?

அவரவின் அடிப்படை விருப்பங்களை
அலட்சியம் செய்வதும் அவமதிப்பதும்தான்
ஜனநாயகமா ?

ஒட்டுமொத்த மக்களின்
உரத்தகுரல் ஒலித்த பொழுதும்
செவிட்டு காதாய் இருப்பதுதான்
அரசாங்கம் கடைபிடிக்கும் ஜனநாயகமா ?

ஜனநாயகம் என்பது
மக்களுக்காக அரசாங்கமா
அரசாங்கத்திற்காக மக்களா
எதுவென்றுதான் புரியவில்லை ?

அடிமைத்தனமா
அடக்கு முறையா
எது ஜனநாயகம் ?

நம்மை நாமே ஆள்வது
வெறும் வார்த்தையோ ?

புரிந்துகொள்ளாத அரசாங்கங்கள்
அவசியம் புரிந்து கொள்ளவேண்டிய தருணம்
எது ஜனநாயகம் என்று ?

இளைஞன் முதல்
இழுத்துகொண்டிருக்கும் கிழவன் வரை
போராட துணிந்து இருக்கிறார் இன்று -
மதுவை எதிர்த்து -
ஆனால் அரசாங்கமோ அலட்சிய போக்கில் .

அடக்குமுறை ஆட்சியில்
அவலங்களின் தொடர்ச்சி தினந்தோறும் .

ஆம் ,
மதுப்பிரியர்களின் பாதுகாப்பிற்கு
காவல்துறை காத்துக்கிடக்கிறது -
அவலத்தின் உச்சம் .

குடிகாரனும் கொலைகாரனும்
கூடும் குடி கூடாரத்திற்கு
கூடுதல் பாதுகாப்பு -
உலகத்தில் எங்குமே இல்லாத அதிசயம் .

மாணவர்கள் சீரழிவு
இளம் பெண்கள் கற்பழிப்பு
கொலை , கொள்ளை என்று
எல்லாவற்றிர்க்கும் உற்பத்தி கூடாரம் மது கூடாரம் .

இருந்தும் அரசு அதிகார தோரணையில்
அவமானமாய் வருமானம் தேடுகிறது .

பள்ளியை காட்டிலும்
பளபளக்கிறது பார் -
யோசிப்பது யார் ?

விஷத்தை கொடுத்து அதை முறிக்க
மாற்று மருந்து கொடுத்து என்ன பயன்
யார் சிந்திப்பார் ?

அத்தனை சமுதாய சீரழிவுகளுக்கும்
சட்டம் ஒழுங்கு கேடுகளுக்கும்
மூலாதார மதுவை ஒழிப்பது என்று .

ஏட்டிக்கு போட்டியாய் ஏத்தனையோ பேர்
ஆதரவும் எதிர்ப்புமாய் -இருந்தும்
அறிவு மங்கிவிட்டதோ என்று ஒரு கேள்வி
எழத்தான் செய்கிறது .

வருமானத்திற்காக எதை வேண்டுமானாலும்
செய்யலாம் என்றால்
ஒழுக்கம் தவறும் , கலாசாரம் கெடும்
வாழ்க்கையே தலைகீழாய் மாறும் !

எழுதியவர் : வினாயகமுருகன் (15-Aug-15, 10:07 am)
Tanglish : jananayagam
பார்வை : 372

மேலே