சுதந்திரம் எங்கள் உரிமை

இன்று நாம் சுதந்திரம் பெற்ற நாளாம்...
இதை கேட்கும் போது வெற்று விழிகளில் வெறித்து பார்க்க தான் தோன்றுகிறது. தன் குடும்பம், தன் வாழ்க்கை, தன் நலன் என்று நோக்காமல் நாட்டுக்காக போராடி உயிரழந்த தியாகிகளை எண்ணி பார்க்கும்போது தான் நாம் பெற்ற சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று உள்ளுக்குள்ளே அசரீரியாய் ஒரு குரல் ஒலிக்கிறது....
அவர்களுக்காக தலை வணங்குகிறேன் இத்தினத்தை...
ஆனால் அதை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இன்றைய சுதந்திரத்தை பற்றி பேசினால் வாதம் விவாதமே நடத்தும் அளவுக்கு கொட்டி கிடக்கிறது பல அவலங்கள்...

எனக்கு தெரிந்த ஒரு நிகழ்ச்சியை பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது...
எனக்கு நெருக்கமான பெண் ஒருத்தி கல்லூரி படிப்பை பயின்று கொண்டிருந்தாள், திடுமென ஒருநாள் என் முன் கன்னம் தாண்டி வழிந்தோடும் கண்ணீரோடு பவ்யமாக வந்து நின்றாள்...என்ன எது என்று விசாரித்தால் பாதி முனகலும் பாதி கோபமுமாக திக்கி திணறி அவள் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது... அவள் சொன்னதை கோர்வையாக சேர்த்து பார்த்த எனக்குள்ளே அத்தனை ஆத்திரம் ஆதங்கம் புரண்டோடியது...

பின் என்ன பிள்ளைகளை படித்து ஆளாக்க மாடாக உழைத்து கொண்டிருக்கும் பெற்றவர்கள் ரத்தத்தை உறிஞ்சு கொண்டிருக்கும் கல்விக்கூடங்கள் செய்யும் வேலையா இது...வெட்க கேடு..
சரி விஷயத்திற்கு வருவோம்...

அவள் படிக்கும் கல்லூரியில் பணத்திற்கு பஞ்சமில்லையாம்...(எப்படி இருக்கும் கடனை வாங்கி கொட்டி கொடுக்க பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் இருக்கையிலே அங்கு லட்சுமி தேவி எப்படி பஞ்சத்தை பரிசளிப்பாள்) ஆனால் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களுக்கு தான் பஞ்சமாம்...சில பாட பிரிவுகளுக்கு பேராசிரியர் யாரும் முறையாக வராமல் ஏனோ தானோ என்று வகுப்புகள் நடந்து கொண்டிருந்ததாம்...

எத்தனை முறை புகார் கொடுத்தும் அவள் படிக்கும் துறையை நிர்வகிக்கும் பொறுப்பாளரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்...இதற்கிடையில் அவர்கள் மாத தேர்வுகளை கூட எழுதி முடித்திருந்தனராம்...இந்நிலைமை இப்படியே நீடித்தால் படிப்புக்கே ஆபத்து வந்துவிடும் என்று பொறுமை இழந்த மாணவிகள் கல்லூரி முதல்வரோடு நடக்கும் மாணவர்களின் குறை தீர் சந்திப்பில் சொல்ல முடிவெடுத்து உள்ளனர்...

ஆனால் அதற்க்கு முன்பாகவே அவர்களின் ஆசிரியர்களோ எச்சரிக்கை விடுத்துள்ளனர், இதைப்பற்றி அங்கு எதுவும் பேசகூடாது அப்படி ஏதாவது நடந்தால் உங்களின் இன்டெர்னல் மார்க் நிர்ணயிக்கும் பொறுப்பு எங்களிடம் தான் உள்ளது என்று மிரட்டி உள்ளனர்...(கல்விகூடங்களில் நடக்கும் பல தவறுகள் மாணவர்களின் மதிப்பெண்ணை காட்டி மறைக்கபடுகின்றது)

ஆனால் எத்தனை நாள் தான் இப்படி பொறுமையாக இருப்பது, நம் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு பணம் கட்டியும் இங்கு நமக்கு பாடம் எடுக்க பேராசிரியர்கள் கூட சரியாக நிர்ணயிக்கபடவில்லையே என்னும் ஆதங்கத்தில் அந்த பெண்ணும் அவள் தோழியும் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளனர்...

இது நியாயம் தான், கல்வி கட்டணம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதித்து வட்டிக்கு மேல் வட்டியாய் பணத்தை பிடுங்கும் கல்லூரிகள் சரியான பேராசிரியர்களை கூட நியமிக்கவில்லை என்றால் அதை மாணவர்கள் தட்டி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது...

ஆனால் அதற்க்கு பிறகு தான் அந்த பெண்ணுக்கு பிரச்சனையே ஆரம்பம், யார் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தது என்று விசாரித்து (கொலை குற்றவாளியை பற்றி துப்பு துலக்குவதை போல்) இவளும் இவள் தோழியும் தான் என்று அறிந்து கொண்டு இவளையும் இவள் வகுப்பு மாணவிகளில் சிலரையும் தனி அறைக்கு அழைத்து மிரட்டி இருக்கிறார்கள்...

'எங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது, எத்தனை பிரச்சனைகளை நிர்வகிக்க வேண்டும் என்று தெரியுமா?(அதற்காக தானே மாதம் மாதம் சம்பளத்தை வாங்கி பைக்குள்ளே திணித்து கொள்கிறார்கள்) என்று அவளை காய்ச்சிய வார்த்தைகளில் அவள் அங்கேயே அழுதிருக்கிறாள், அந்நிலையை கூட பொருட்படுத்தாமல் மேலும் அவர்கள் பேசியதில் வேறு வழியின்றி மன்னிப்பும் கேட்டிருக்கிறாள் அப்பெண், இந்த ஒருமுறை தவறு செய்து விட்டாய், இதற்க்கு மேல் இப்படி செய்ய கூடாது என்று பெருந்தன்மையாக மன்னிப்பதை போல் பேசி அனுப்பி வைத்திருக்கின்றனர்...

இதை பற்றி வீட்டில் சொன்னால் உனக்கு எதற்கு இந்த தேவை இல்லாத வேலை என்று அவளுக்கே வார்த்தைகள் திரும்பும் என்று என்னிடம் வந்து அழுது புலம்பினாள்...

இப்படி ஒரு நியாயமான விஷயத்தில் கூட மாணவர்கள் தங்களின் குரலை உயர்த்த முடியாமல் முடக்கபடுகின்றனர்... அப்படியே பழக்கபடுத்தி வளர்க்கபடுகின்ற்றனர்..படிப்பு முடிந்து சமுதாயத்தில் நுழையும் போது அவர்கள் நினைத்து கூட பார்க்காத அநீதிகள் நடக்கும்போது பழக்க தோஷத்தில் கண்டுகொள்ளாமல் தன் வாழ்க்கை பாதையை நோக்கி பயணிக்கின்றனர்...

சுதந்திரம் என்பது அடித்தட்டு மக்கள் கூட தனது பேச்சுரிமையை எல்லா இடங்களிலும் பிரயோகபடுத்துவது தான்...ஆனால் நாளைய தூண்கள் என்று வர்ணிக்கப்படும் இளைஞர்கள், இளைநிகளே பேச்சுரிமையை இழக்கும் போது சுதந்திரம் எங்கு உயிர் வாழ்கிறது என்று புலப்படவேயில்லை...

இன்று இப்பெண் இழந்த பேச்சுரிமை நாளை அவளது குழந்தைக்கும் மறுக்கப்படலாம், இப்படி பேசவேண்டியவர்கள் எல்லாம் பேச்சிழந்தால் நாட்டில் அநீதிகள் மட்டுமே சத்தமாக முழங்கப்படும்...

சுதந்திர தினத்தை நினைவில் வைத்து போற்றி புகழும் நாம் இனியாவது சுதந்திரம் நாட்டிற்கு மட்டும் அல்ல ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தான் என்று உணர்ந்து கொள்வோம், இதை புரிந்துகொள்ள விருப்பம் இல்லாதவர்க்கும் உணர்த்துவோம்...

பேச்சுரிமை பறிக்கபட்டாலும் எழுத்துரிமையையாவது வழங்கும் இணையதளத்திற்கு என் நன்றிகள்...

எழுதியவர் : இந்திராணி (15-Aug-15, 3:36 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 817

மேலே