இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 6

சொல்லுழவர் வித்திடா தெய்ப்பிற் றுகளெய்தும்
செல்வறப்பிற் கேடுறினுஞ் சேரா பழியவற்கு
நல்ல வினைதொடங்க னங்கடனா முற்றாக்கால்
இல்லையே நிந்தை யெமக்கு. 6

துகள் - குற்றம்; செல் - மேகம்;

பதுவுரை:

செல் - மேகமானது


வறப்பின் - தன் தன்மையில் குன்றி வறண்டு

கேடுறினும் - அதனால் கேடுகளை அடைந்தாலும்

பழி - பாவங்கள்

அவற்கு - அவைகளுக்கு (மேகத்திற்கு)

சேரா - சேராது.

ஆனால்,

சொல்லுழவர் - சொல்லை ஏராக்கி படிப்போர் மனத்திங்கண் உழுகின்றவர்கள் அதாவது பண்படுத்தித் தயார் செய்பவர்கள்;

வித்திடாது - பிறர் மனத்தில் பதிய வைக்காமல்

எய்ப்பின் - தவறிவிடுவார்களேயானால்

துகளெய்தும் - குற்றம் உண்டாகும்.

ஆகையினால்,


நல்ல வினைதொடங்க(ல்) - (ஆகையினால்) நல்லது எனப்பட்ட செயல்களைத் தொடங்கிவிடுவது என்பது

நம்கடனாம் - நமது கடமையென்று கருதப்படும்.

உற்றாக்கால் - அப்படிச் செய்தும் நற்பயன் கிட்டாவிட்டால்

நிந்தை யெமக்கு. - அதனால் நமக்குக் குறையொன்றும்

இல்லையே - இருக்காது. (ஏகாரம் உறுதி பற்றி வந்தது)

பொருளுரை:

மேகமானது தன் தன்மையில் குன்றி வறண்டதனால் உலகு கேடுகளை அடைந்தாலும் பாவங்கள் அவைகளுக்கு (மேகத்திற்கு) சேராது. ஆனால், சொல்லை ஏராக்கி படிப்போர் மனத்திங்கண் உழுகின்றவர்கள் அதாவது மனத்தையும், குணத்தையும் பண்படுத்தித் தயார் செய்பவர்கள் பிறர் மனத்தில் நற்செயல்களைப் பதிய வைக்காமல் தவறி விடுவார்களேயானால் குற்றம் உண்டாகும்.

ஆகையினால், சொல்லை ஏராக்கி படிப்போர் மனத்திங்கண் உழுகின்றவர்கள் நல்லது எனப்பட்ட செயல்களை தொடங்கிவிடுவது என்பது நமது கடமையென்று கருதப்படுகிறது. அப்படிச் செய்தும் நற்பயன் கிட்டாவிட்டால் அதனால் நமக்குக் குறையொன்றும் இல்லை எனப்படுகிறது.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ் சண்முகனார் (15-Aug-15, 8:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 141

மேலே