வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது - கார் நாற்பது 28

இன்னிசை வெண்பா

இமிழிசை வானம் முழங்க, குமிழின்பூப்
பொன்செய் குழையின் துணர்தூங்க, தண்பதம்
செவ்வி உடைய, சுரம்நெஞ்சே!-காதலிஊர்
கவ்வை அழுங்கச் செலற்கு! 28

- கார் நாற்பது

பொருளுரை;

ஒலிக்கும் இசையினையுடைய முகில் முழங்குதலைச் செய்ய குமிழின் பூக்கள் பொன்னாற் செய்யப் பட்ட குழைபோல் கொத்துக்களாய்த் தொங்க, மனமே! நம் காதலியது ஊருக்கு அலர் கெடும் வகை நாம் செல்வதற்கு காடுகள் குளிர்ந்த பதமும் செவ்வியும் உடையவாயின!

இமிழ் இசை - இனிய இசையுமாம்; சுரம் - காடு; அருநெறியுமாம்; கவ்வை - அலர்; ஊரார் கூறும் பழமொழி. அழுங்கல் வருந்துதல்; ஈண்டு இலவாதல்;

1. குமிழிணைப்பூ என்றும், குமிழிணர்ப்பூ என்றும் பாடம்.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (6-Oct-25, 12:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே