இந்தியாவின் நிகழ்காலம்

இந்தியாவின் நிகழ்காலம்.

அனைவருக்கும் 69 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ......................................................................

இதை இந்த தருணத்தில் கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், அதே தருணத்தில் என் மனதில் தோன்றிய சில கேள்விக்கணைகளை எழுத்துக்களை கொண்டு வார்த்தையாக வடித்து இந்த "எழுத்து" இணையத்தில் சமர்பிக்க ஆசைபடுகிறேன். நமது இந்திய தாய் திருநாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 நள்ளிரவில் கடைசி பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் இடமிருந்து சுதந்திரம் பெற்று சுதந்திர தேசமானது. அன்று அவர்கள் சிந்திய உதிரத்தின் விளைவே இன்று நம் சுதந்திர வானத்தில் சுவாச காற்றை சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறதா? உண்மையாக சொல்லவேண்டும் என்றால் அந்த கேள்விக்குறிக்கு பதிலாக இன்னும் முற்றுப்புள்ளி வைக்கவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தேச தந்தை மகாத்மா காந்தி பிறந்த இந்த இந்திய தாய் திருநாட்டில் தான் நாத்துராம் கோட்சே பிறந்தார் என்று நினைக்கையில் மனசு வலிக்கத்தான் செய்கிறது. அன்று தேச தந்தை மகாத்மா காந்தியை கொன்றதிற்காக அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949 ல் இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டார். சுதந்திரம் அடைந்து கடந்த 69 ஆண்டுகளாக இந்தியா பெற்ற பல சரித்திர சாதனைகளையும், இந்திய சந்தித்த பல சவால்களை நினைக்கையில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் அனைத்தும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்து உள்ளன என்று கூறுவது மிகையல்ல. உலக மக்களின் மனதில் நம்பிக்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம், விண்வெளி ஆராய்ச்சிகளிளும் முன்னணி நாடுகளுடன் போட்டிபோடும் அளவிற்கு அபரிவிதமான வளர்ச்சி என்று இப்படி எல்லா துறைகளிலும் சொல்லிகொண்டேபோகலாம்.

ஆனாலும், கடந்த சில வருடங்களாக நடந்து வரும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது அதிலும் குறிப்பாக சில நிகழ்வுகளை மட்டும் இங்கு பதிய நினைக்கிறேன். மார்ச் 12, 1993 ல் மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 250 பேர் உயிரிழந்தனர், 700 பேர் படுகாயம் அடைந்தனர். பிப்ரவரி 14, 1998 ல் தென்இந்தியாவின் அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் தொழில்நகரமான கோயம்புத்தூரில் 12 கிமீ சுற்றுவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய 13 குண்டுவெடிப்பில் 35 ஆண்கள், 10 பெண்கள் 1 குழந்தை உட்பட 46 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர் அதில் 2000 பேர் படுகாயமடைந்தனர். டிசம்பர் 13, 2001 ல் இந்திய ஜனநாயகத்தின் தொட்டிலாக கருதப்படும் பாராளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதல், ஜுலை11, 2008 ல் மும்பை புறநகர் இரயில்வேயில் மாலை 6:24 முதல் 6:35 மணிக்குள் இடைப்பட்ட 11 நிமிடத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த ஏழு குண்டுவெடிப்புகள் இதன் மூலம் குறைந்தபட்சம் 200 பேர் இறந்தனர் மேலும் 700 பேருக்கு மேல் காயமுற்றனர், நம் பாரத தேசத்தின் தலைநகரான டில்லியில் டிசம்பர் 16, 2012 ல் மருத்துவம் பயிலும் மாணவி திரைப்படம் பார்த்துவிட்டு இரவு 9.30 மணியளவில் வீடு திரும்பும் போது மக்கள் பயணம் செய்யும் பேருந்திலே வன்புனர்வு எண்ணம் கொண்ட ஆறு நபர்களால் கும்பல்-வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, இதனால் பாதிக்கப்பட்ட பெண் 29 டிசம்பர், 2012 ல் உயிரிழந்தார், கடந்த ஆண்டு மே 1 ல் காலை 7:15 மணியளவில் மக்கள் அதிகம்கூடும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9வது நடைமேடையில் குவகாத்தி-பெங்களூர் எக்ஸ்பிரஸ் வரும்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பு என்று கடந்த கால இந்திய வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களாக ஒருபுறம் இருக்க.

மற்றொருபுறம், இந்தியாவின் முதுகெலும்பு என்று போற்றப்படும் விவசாயம் அழிவின் விளிம்பில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதின் எண்ணிக்கை மிகவேகமாக உயர்ந்துகொண்டு வருகிறது. தேசிய குற்றப் பதிவு மையம் (National Crime Records Bureau) 2013 ஜூன் மாத இறுதியில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் 2,84,694 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

-மருதகாசி

இந்தியாவின் தூண்கள் என்று கருதப்படும் மாணவர்களோ அதற்கும் ஒருபடி மேல் சென்று நம் நாட்டில் படித்துப்பட்டம் வாங்கிவிட்டு வெளிநாடுகளில் குடியேற நினைக்கிறார்கள். புள்ளிவிவரத்தின்படி கடந்த சில வருடங்களில் ஐ.ஐ.டி யில் படித்த மாணவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு மாணவர்கள் வெளிநாடுகளில் குடியேறவே ஆசைப்படுகிறார்கள். பண்டையகால இந்தியாவில் புகழ் பெற்ற கல்வி நிலையமான நாளந்தா, தட்சசீலம் போன்றவற்றில் வெளிநாட்டவர்கள் வந்து கல்வி பயன்ற காலம் கடந்து இன்று இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க நினைக்கும்நிலை, இதை பார்க்கையில் மேற்கூறிய கவிஞர் மருதகாசி வரிகளே நினைவிற்க்கு வருகிறது.

அனைத்து உயிரிணுக்களில் உள்ள ரைபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆராய்ச்சிக்காக 2009 ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவரும், 1665 ல் தொடங்கிய உலகின் பழமையான அறிவியல் அமைப்பான லண்டன் ராயல் சொசைட்டியின் தலைவருமான சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், 1978 ல் உயர்நிலைப்பள்ளி பயிலும்போதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் (Email) என்பதை உருவாக்கியவர் வி. ஏ. சிவா ஐயாதுரை அவர்கள், மேலும் இன்று உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சை அவர்கள் கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி யில் பொறியியல் பட்டம் பெற்றவர். இப்படி உலகத்தின் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளையும் நாம் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோமே என்று எண்ணும்போது மீண்டும் நினைக்கத் தோன்றுகிறது அன்று அவர்கள் சுதந்திரத்திர்க்காக செய்த விலைமதிப்பற்ற தியாகத்திற்கு இன்று நாம் விலைபேசுகிறோமோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாடுமுழுவதிலும் சுதந்திர தினத்தையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு என்று சுதந்திர தினத்தைக் கூட-இங்கு சுதந்திரமாக கொண்டாடிடாமுடியாமை, அயல் நாடுகளின் எல்லைதாண்டிய பயங்கிரவாதம், இதையெல்லாம் பார்க்குபோது அன்று ஆங்கிலேயரிடமிருந்து பல உயிர்களை இழந்து, போராடி வாங்கிய சுதந்திரத்தை உள்நாட்டு கொள்ளையரிடம் அடமானம் வைத்துவிட்டோமோ? என்றுதோன்றுகிறது. இந்த நிலையெல்லாம் என்று மாறுகிறதோ அன்றுதான் நம் நாட்டின் உண்மையான சுதந்திர தினம். மேன்மைமிகுந்த இந்தியத்திருநாட்டில் பிறந்ததற்காக நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளும் இந்தவேளையில், நம் நாட்டின் சுதந்திரத்திர்க்காக பாடுபட்ட அனைத்து தேச தலைவர்களின் ஆசைப்படியும், சாதி, மதம் போன்ற சமுதாய சாக்கடைகளை வேரறுத்து, தேசப்பற்று கொண்டு ஒற்றுமை உணர்வுடன் ஏவுகனை தந்தை, கனவு நாயகன் டாக்டர். ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களின் கனவான "2020 ல் இந்தியாவை வல்லரசாக" மாற்ற ஒவ்வொருவரும் இந்த 69 வது சுதந்திர தின நன்னாளில் உறுதிமொழி எடுத்துகொள்வோம்.

நன்றி

மணி சின்னசாமி
கூகையூர்

எழுதியவர் : மணி சின்னசாமி, கூகையூர் (16-Aug-15, 9:41 pm)
சேர்த்தது : மணி சின்னசாமி
பார்வை : 1954

சிறந்த கட்டுரைகள்

மேலே