நகர மறுக்கும் நினைவுகள் - செம்பருத்தி

ஒரு நாள் பூ மார்கெட்டில் இருந்தேன்.

இதென்ன, செம்பருத்தி பூப்போல் இருக்கிறதே..
‘என்னா சார், அப்படி பாக்கிற. இது செம்பருத்தி பூ. எடுத்துக்க. 3 பத்து ரூபா. உனக்காக 4 தரேன்’.

டேய் மணி 4.30 ஆச்சு எழுந்திரி. போய் பூ எடுத்து கிட்டுவா.
தூக்கம் தூக்கமா வருது.

‘பூ எடுத்துகிட்டு வந்து சாமிக்கு போட்டா புண்ணியம்’. அன்று கட்டிய பூக்கள் இல்லாத காலம். (காலம் என்ன காலம் 1000 வருஷத்துக்கு முன்னாடியா, இப்பத்தான் 30 வருஷத்துக்கு முன்னாடி)

உறவுகளுடனும், நண்பர்களுடனும் பூவினை பகிர்தல் என்பது இல்லாத காலம்.
இன்னைக்கு எப்படியும் ராமு வீட்டு அரளியையும், செல்லமா அவர்கள் வீட்டில் செம்பருத்தியையும் அந்த செந்தில் பயல் எடுக்குறத்துக்கு முன்னாடி எடுத்துடனும். உடல் வேகம் கொண்டது.

1.
அப்பாடா இன்னும் யாரும் வரல.அதால எல்லா பூவும் நமக்குத்தான்.

2.
ஓஹோ, இன்னைக்கு நீ அரளிப்பூ எடுக்கறயா. இரு நான் போயி செம்பருத்திப் பூ எடுத்து முடிச்சிடுறேன்.

n
கொஞ்சம் தூங்கிட்டேன். அதனால எல்லாப் பூவையும் அவன் எடுத்துட்டான்.

இரண்டு விதமான செம்பருத்தி. ஒன்று சாதாரண செம்பருத்தி, மற்றொன்று அடுக்கு செம்பருத்தி, ஒவ்வொன்றும் இப்போதைய உள்ளங்கைகளை விட பெரியது. கொஞ்சம் பவழமல்லி(பாரிஜாதம் என்பதை விட பவழமல்லி என்றால் வாசனை கூடத்தான்). பவழமல்லியை ஊசி நூலில் கோர்த்து பட அளவுக்கு போட்டா தனி அழகுதான்.

பெரியவர்களின் பேச்சுக்கள்
1.பாத்துப் போ, பூச்சி பொட்டு (பாம்புதானே) ஏதாவது செடில கிடக்கப் போவுது.
2.ஏண்டா இப்படி இத்தனை விடியக் காலையில வந்து பூ எடுக்குறீங்க. இன்னைக்கு .உங்க வீட்ட சொல்றேன். விடிஞ்ச பிறகு வாங்கடா?
3ஏண்டி கண்ணுகளா, எல்லா பூவையும் எடுத்துகிட்டு போறீங்களே. எனக்கு கொஞ்சம் குடுக்கக் கூடாதா. செல்லம்மா மச்சி (யார் இப்படி ஒரு உறவை சொல்லி முதலில் அழைத்தார்கள்). இது தான் அதிக பட்ச கோவம். ஆனால் எந்த பெரியவர்களும் மனமார திட்டியதில்லை

டேய், மாப்ள ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம கட செந்தில் அதாண்ட ஒன்னோட பூ எடுபான அவன் செத்துப் போயிட்டான் என்ற நண்பன் போனில் சொன்ன நிகழ்வும், போதும்பா எவ்வளவு நேரம் தான் பூவை பாத்துகிட்டே நிப்ப. சீக்ரம் வாங்கு. வீட்டுக்கு போகணும் என்ற மகனின் குரலும் ஒரு சேர ஒலிக்கின்றன.

மலர்கள் மரணிப்பதில்லை. ஏனெனில் அவைகளின் வாசம் எப்போதும் நீங்காமல் இருப்பதால்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (16-Aug-15, 4:48 pm)
பார்வை : 212

மேலே