என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 17

சென்ற பகுதியின் இறுதியில் நான் எங்கள் Chairman திரு S V சண்முகவடிவேலு அவர்களைப் பற்றி கூறியிருந்தேன் .
அவருக்கும் நிர்வாகத்திற்கும் ஒத்து வராததால் , அவரை பணி நீட்டிப்பு வழங்க இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நேரத்தில் எங்கள் வங்கியின் குமாஸ்தாவாக இணைந்து படிப்படியாக பதிவியில் உயர்ந்து , நிர்வாகத்திடமும் , வங்கி ஊழியர்களிடம் நன்கு அறிமுகமான திரு SP சபாபதி அவர்களை , Reserve Bank க்கு சிபாரிசு செய்து அடுத்த சேர்மனாக நியமிக்க அவரின் பெயரை அனுப்பினர் . அவர்களும் அதை பரிசீலித்து அனுமதியும் வழங்கி , 3 ஆண்டுகளுக்கு Chairman ஆக பதவியில் அமர்த்தினர். அவருக்கு ஒவ்வொரு ஊரிலும் ஊழியர்கள் சார்பிலும் , நகரத்தார் கிளைகள் சார்பிலும் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன.
ஆனாலும் ஒருகட்டத்தில் மீண்டும் நிர்வாகத்திற்கும் அவருக்கும் ஏதோ சில காரணங்களுக்காக பிணக்கு ஏற்பட்டது. அவரை நிர்வாகம் பதவி நீக்கமும் செய்தனர். நான்தான் அந்த கடிதத்தை நேரில் சென்று அளிக்க வேண்டிய சூழ்நிலையும் எனக்கு ஏற்பட்டது. ( நிர்வாக கட்டளைப்படி ) . அவர் வெளியில் சென்று வழக்குகள் பலவும் வங்கிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தார் . அதனால் பலவித குழப்பங்கள் நிலவின. செய்தித் தாள்களில் அடிக்கடி இதைப்பற்றி செய்திகள் வர ஆரம்பித்தன . இது விஷயமாகத்தான் முதன்முதலில் நானும் எங்கள் அதிகாரியும் நீதிமன்ற படிகளில் கால் பதிக்க நேர்ந்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் , அதி ரகசியமான அலுவல் வழக்கும் என்பதால் , நாங்கள் இருவரும்தான் முழுக்க முழுக்க ஈடுபட வேண்டிய சூழ்நிலை.
நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்திடும் பணியது . என் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 52 வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலை இதன் தொடர்பாக வங்கிக்கு . அன்றைய நிர்வாகம் எங்களை முழுமையாக நம்பிக்கை வைத்து அந்த பணியினை ஒப்படைத்தனர் . அனைத்து வழக்குகளிலும் வெற்றிப் பெற்றோம். ஓரிரு வழக்குதான் மேல்முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற நேர்ந்தது.
இதனால் எனக்கும் நிரவாக்த்திற்கும் இடையே மேலும் வலிவான நெருக்கம் அடைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அனைவரும் அறிவர் . ஆனாலும் அதற்காக இந்த நெருக்கத்தை நான் எவரிடமும் என்னுடைய பணிக்காகவோ , சொந்த நலத்திற்காகவோ பயன்படுத்தியதே இல்லை. இதனை அத்துணை ஊழியர்களும் அறிவர். மறுப்பவர் இன்றுவரை யாருமில்லை. இதனிடையில் RBI , இடைக்கால நிர்வாகத் தலைவராக திரு P R R நாயர் எனும் அவர்களின் உயர் அதிகாரியை நியமித்தனர். அவரும் ஓராண்டு பணியினை கவனித்தார். அவருக்கும் என் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல . நன்றாக பழகுவார் என்னிடம்.
பின்பு திரு G P முனியப்பன் அவர்களை வங்கியின் chairman ஆக நியமித்தனர் . மிகவும் அனுபவம் மிக்கவர் வங்கித் துறையில் . RBI ல் பொது மேலாளராக பணி புரிந்திட்ட அவரை இங்கே நியமித்தனர் . மிகவும் எளிமையானவர் , நல்ல மனிதர். அனைவரிடமும் சகஜமாக பழகுவார். என்னிடமும் அன்புடன் பழகுவார் ,மிகவும் நெருக்கமாகிவிட்டார் ....எங்கள் வீட்டிற்கு ஒருமுறை விருந்திற்கு அவரையும் எழுத்தாளர் திரு லேனா தமிழ்வாணன் அவர்களையும் அழைத்திருந்தேன் . இருவரும் வந்து உணவருந்திட்டு , கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பேசிவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிய அந்த பொழுதை என்னால் மறக்கவே முடியாது. திரு G P முனியப்பன் அவர்கள் பல பதவிகளில் உயர்ந்து , Deputy Governor , Reserve Bank of India ஆக பணியாற்றி ஓய்வுப் பெற்றார் . இன்று கோபிசெட்டி பாளையத்தில் வசிக்கிறார் .
அதன்பிறகு Chairman ஆக வந்தவர் , நிறுவனர் குடும்பத்தில் இருந்து , நிறுவனரின் பேரன் Dr கருமுத்து தியாகராஜன் . அவர் அமெரிக்க பல்கலைகழகத்தில் படித்து , அங்கேயே உதவி பேராசிரியராக பணி புரிந்தவர் . ஏற்கனவே இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தார். Economics ல் டாக்டர் பட்டம் பெற்றவர் . அவர் முதலில் வந்தவுடன் வங்கியை முழுவதுமாக தற்கால நவீன முறையில் மாற்றி அமைத்தார். எதையும் உடனடியாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர். ஆனாலும் என்ன நினைக்கறார் , என்ன செய்யப் போகிறார் என்று யூகிக்கவே முடியாது . என்னிடம் மிகவும் அன்புடனும் , கனிவுடனும் பழகினார். நல்லமுறையில் நடத்தினார். நான் ஒரு சாதாரண ஊழியன் என்று நினைக்காமல் , நண்பரைப் போல இருந்தார். காரணம் ஏற்கனவே எனக்கு அறிமுகம் ஆனவர் .என்னைப் பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார் . அடிக்கடி வீட்டிற்கும் செல்வேன் அலுவல் காரணமாக . சில நேரங்களில் என்னை வைத்தே உயர் அதிகாரிகளிடம் பல முக்கிய விஷயமானாலும் விவாதிப்பார் . ஆனால் இறுதி கட்டத்தில் , அவரின் பணி காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்னர் அதற்கு நேர்மாறாக மாறிவிட்டார் என்னிடம் . அதற்கு காரணம் இன்றுவரை எனக்கு தெரியாது ...புரியாத புதிராக உள்ளது.
அவரின் ஆலோசனைப்படிதான் , நானும், எங்கள் பொது மேலாளர் , அதிகாரி ஒருவரும் அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தோம். நான் இரண்டு முறை சென்று வந்தேன் . முதல் பயணத்தில் எங்களுடன் இயக்குனர் , நடிகர் திரு விசு அவர்களும் அவர் மனைவியும் அழைத்து சென்றோம். இரண்டாவது முறை நானும் எங்கள் துணை பொது மேலாளர் திரு RM சுப்பையா அவர்களும் சென்றோம் ..வங்கியின் அயல்நாட்டு சேவையை விரிவாக NRI களுக்கு எடுத்து சொல்லவே சென்றோம். திரு விசு அவர்கள் வங்கியின் சார்பில் அங்கு வாழும் தமிழர்களை அழைத்து கூட்டங்கள் பல நடத்திட ஏற்பாடும் செய்தோம். அவர் அங்கே அரட்டை அரங்கம் போல கேள்வி பதில் நிக்ழ்ச்சிகளும் நடத்தினார். நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு அறிமுகமான நல்ல நண்பர் எனக்கு திருச்சி , லப்பைக்குடியை சேர்ந்த திரு அன்வர் பாட்சா அவர்கள் ஆவர். அவரின் தன்னலமில்லா உதவும் பண்பு எனை கவர்ந்தது. ( இந்த பயணம் பற்றி அடுத்த பகுதியிலும் சொல்கிறேன் )
ஆனால் அவர்தான் எங்கள் வங்கியை 2000 ம் ஆண்டில் , ICICI Bank க்கு விற்றும் விட்டார் . அவர்கள் குடும்பத்திடம்தான் அதிக பங்குகள் இருந்திட்ட காரணத்தால் மிக எளிதாக முடித்து விட்டார் . ஏன் அப்படி செய்தார் என்றும் எங்கள் யாருக்கும் விளங்கவில்லை. ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம் . மிகவும் வருந்தினோம். நன்றாக செயல்பட்ட எங்கள் வங்கி , தென்னகத்திலே அன்று முதன்மையாக விளங்கிய வங்கி , அவரது தாத்தா கலைத்தந்தை அவர்களால் நல்ல எண்ணத்துடன் தொடங்கப்பட்ட வங்கி , பல குடும்பங்களுக்கு உதவிட்ட தமிழர்களின் வங்கி , 2000 ம் ஆண்டு மார்ச் மாதம் மறைந்து , அதுவரை 32 கிளைகளே இருந்த ICICI வங்கி , Bank of Madura வுடன் இணைந்ததால் , அல்லது அவர்களுடன் எங்களை இணைத்ததால் , உடனடியாக அன்றே எங்கள் 500 கிளைகள் அனைத்தும் ICICI Bank ஆனது. ஒரே குடும்பமாக இருந்த நாங்கள் சிதறினோம் . அவர்களின் ஆட்சி முறையே முற்றிலும் மாறுபட்டு இருந்தது. எங்கள் ஊழியர்களை மிகவும் கேவலமாக நினைக்க ஆர்மபித்தனர் . தமிழர்க்கு தமிழர்தான் எதிரி என்பதைப் போல அங்கேயும் ஒரு தமிழர்தான் அந்த நிர்வாகத்திற்கு எங்களுக்கு எதிராக பல செயல்களை மேற்கொள்ள வைத்தார். இன்றும் அவர் அங்கே உயர் பதிவியில் இருக்கிறார். காலம்தான் பதில் சொல்லும் அவருக்கு .
மீண்டும் சந்திக்கிறேன் .....
பழனி குமார்
17.08.2015