இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 10

பேய ரொடுபாலர் பித்தரென மெய்யறிவின்
தூயர் வழீஇ நடப்பினுஞ் சூழற்க
ஆயுங்கா லவ்வா றொழுகவா வல்நரி
சீயவினை மேற்கொள் செயல். 20

வழீஇ – வழுவி, சீயம் - சிங்கம்

பதவுரை:

மெய்யறிவின் – உண்மை அறிவின்கண் நின்று ஞானம் உடைய

தூயர் - தமது நடத்தையில் தூய்மையினைக் கடைப்பிடிக்கும் பெரியோர்

பேய ரொடு பாலர் பித்தரென – வெறிகொண்டவர், சிறுவர், பித்தர் போன்று

வழீஇ - தமது இயல்பான நடத்தையில் மாறுபட்டு

நடப்பினும் - செயல்பட நேரினும்

சூழற்க – சாமானியர்கள் அவர்களைப் போல செயல்பட முற்படாதீர்கள்.

ஆயுங்கால் - நுணுக்கமாக எண்ணிப் பார்த்தோமானால்

அவ்வா றொழுக – அவர்களைப் போல செயல்பட

அவாவல் - செய்ய விரும்புவது

நரி - (எவ்வளவு சாமர்த்தியமும், தந்திரமும் கொண்ட பிராணியானாலும்) நரியானது

சீயவினை மேற்கொள் செயல் - சிங்கத்தினைப் போலச் செயல்களைச் செய்து நடந்துகொள்ள முயலுவதற்கு ஒப்பாகும்.

மெய்யறிவின் தூயரை சிங்கத்திற்கும், சாதாரண மனிதர்களை நரிக்கும் உவமையாக்குகிறார் இப்பாடலின் கவிஞர் அரசஞ் சண்முகனார்.

பொருளுரை:

உண்மை அறிவின்கண் நின்று ஞானம் உடைய தமது நடத்தையில் தூய்மையினைக் கடைப்பிடிக்கும் பெரியோர் வெறிகொண்டவர், சிறுவர், பித்தர் போன்று தமது இயல்பான நடத்தையில் மாறுபட்டுச் செயல்பட நேரினும் சாமானியர்கள் அவர்களைப் போல செயல்பட முற்படாதீர்கள்.

நுணுக்கமாக எண்ணிப் பார்த்தோமானால், அவர்களைப் போல செயல்பட செய்ய விரும்புவது (எவ்வளவு சாமர்த்தியமும், தந்திரமும் கொண்ட பிராணியானாலும்) நரியானது சிங்கத்தினைப் போலச் செயல்களைச் செய்து நடந்துகொள்ள முயலுவதற்கு ஒப்பாகும்.

பேராசிரியர் திரு. அருணகிரி:

மெய்யறிவின் தூயராகிய பெரியோர் வெறிகொண்டவர், சிறுவர், பித்தர் போன்று செயல்படுவர். அவரைப் பின்பற்று. ஆனால், அவருக்கு சமமாக எண்ணி அவர் போல் நடந்தால் அது நரி சிங்கம் போல் நடப்பதை ஒத்தது.

மதிப்புமிகு முன்னாள் மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவரும், பேராசிரியருமான திரு. அருணகிரி அவர்கள் இப்பாடலுக்கு அளித்த கருத்தினை ஒட்டியே என் பதவுரையும், பொருளுரையும் அமைகிறது.

நண்பர் எசேக்கியல் அவர்களுடன் பல கருத்தாடல்களுக்குப் பின், பேராசிரியர் திரு. அருணகிரி அவர்களின் ஆலோசனைக்குப் பின், முடிவாக இக்கருத்தினை வெளியிடுகிறேன். இருவர்க்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தப் பதிவான 'பேய ரொடுபாலர் பித்தரென' என்ற பாடலுக்கு இசைவான கருத்துடைய மேலும் இரண்டு பாடல்களை எடுத்துக் காட்டாகப் பதிவு செய்கிறேன்.

1. குமரகுருபர அடிகளின் 'நீதிநெறி விளக்கம்' பாடலொன்றில்,

இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசையாகா மற்றையோர்க் கல்லால் - பசுவேட்டுத்
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே
ஊனோம்பி ஊன்றின் பவர். 97

பொருளுரை:

முனிவர்களாகிய பெரியோர் செய்கை (சில நேரங்களில்) பிறர் கொள்கைக்குப் பொருத்தம் இல்லாததாக யிருந்தாலும், சிறியோர்க்கன்றி (அவர் போன்ற பெரியோர்க்கு) குற்றமாகாது. உலகின் (நலங்கருதிப்) பசுவைப்படைத்து முத்தீ வேள்வி செய்து மழை பெய்தலைச் செய்விக்கும் வேள்வியாசிரியரை (தமது) உடம்பைப் பாதுகாக்க வேண்டி (வேறோர் உயிரின்) இறைச்சியைத் தின்பவர்கள் ஒப்பாவார்களா? ஆகமாட்டார்கள்.

விளக்கம்:

முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினியம், வேட்டு – பசு, வேள்விக்குரிய உயிர்களுக்குப் பொதுப் பெயர். மேலையோர் - முனிவர்.

2. "யானைமதப் பட்டால் அலங்கார மாஞ்சிறுநாய்
தானுமதப் பட்டாற் சரியாமோ – ஞானி
தடைமீறி னாலுஞ் சரியாகும் கன்மி
நடைமீறில் ஆகாது காண்." - ஒழிவிலொடுக்கம்

கன்மி -
1. Labourer - தொழிலாளி. மட்கலஞ்செய் கன்மி (பாரத. திரௌபதி மாலை. 64)

2. One who duly performs religious rites - கருமங்களைச் சரியாய் அனுட்டிப்போன். கன்மிஞானிக்கொப்பே (திருமந். 536).

3. Official - உத்தியோகஸ்தன். நம் கன்மிகளில் வீரசோழப்பல்லவரையன் (S.I.I. iii, 135).

4. Heinous sinner, perpetrator of crimes - தீவினையாளன்.

கருத்து:

பெரியோர் சில சமயங்களில் தீச்செயல்கள் புரிந்தாலும் அவற்றாலும் உலகுக்கு நன்மையே பிறக்குமாகையால் அவை பழிக்கப்படாது.

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ் சண்முகனார் (18-Aug-15, 8:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 164

சிறந்த கட்டுரைகள்

மேலே