பாட்டாளி நம் கூட்டாளி

இறைவன் பூமியின் படைப்பாளி
இருப்பவர் அனைவரும் உழைப்பாளி
பகலிலும் இரவிலும் பாடுபட்டே
பூமியில் படைப்பவன் பாட்டாளி

உலகை செதுக்கி உருவம் கொடுக்கும்
உளியைப் போன்றவன்
அகன்றக் கடலின் பேரலை போல்
ஆற்றல் கொண்டவன்

உடலில் மழையும் வெயிலும் தாங்கும்
உறுதி உள்ளவன்
இதயம் தன்னில் சோம்பல் தங்க
இடம் தராதவன்

பொறுமை கொண்டு எதையும் நேக்கும்
பண்பு கொண்டவன்
புரட்சி என்று வந்து விட்டால்
பொங்கி எழுபவன்

உழைப்பு உள்ள இடத்தைத் தேடி
உவந்து செல்பவன்
வறுமை வந்தால் தாங்கி கொள்ளும்
வலிமை உள்ளவன்

உழைப்பு என்ற ஒரே இசையில்
தழைத்து நிற்பவன்
மழைத் துளியைப் போல நல்ல
மாண்பு உள்ளவன்

தம்பட்ட மில்லா மனிதர் முன்னே
கும்பிட்டு நிற்பவன்
குணம் கெட்ட மனிதர் என்றால்
குமுறி எழுபவன்

பாலும் தேனும் பருகிடக் கொடுத்து
பசியுடன் வாழ்ந்திருப்பான்
ஊருக்கும் உலகிற்கும் உணவினைத் தந்து
உருவத்தில் கருத்திருப்பான்

கோட்டையில் ஏறியே ஆட்சியில் அமர
பாட்டையைக் காட்டுபவன்
ஓயாது வீசும் தென்றலைப் போன்று
ஓய்வுக்குப் பகையானவன்

அடுக்கு மாடியும் ஆடும் கதிரும்
அவனின் உழைப்பாலே
அழகிய ஆடைகள் அணிமணி கூட
அவனது படைப்பாலே

முன்னேற்றம் என்பது பாட்டாளி மக்களின்
முற்றிய உழைப்பாலே
உலகத்தில் காணும் அதிசயம் எல்லாம்
உழைப்பவர் திறனாலே.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (24-Aug-15, 6:17 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 55

மேலே