இவர் கண்டிப்பாக போலி மருத்துவர் அல்ல

மருத்துவர் போலியைப் பற்றி இங்கு பெருமையாகக் கூறிக்கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு முறை தெரியாத்தனமாக அவரது மருத்துவமனைக்கு போக வேண்டிய சூழ்நிலையில் மாட்டிக்கொண்டேன். இவர் கண்டிப்பாக போலி மருத்துவர் அல்ல... மருத்துவர் போலி!!!

அவரது அறையே மிகவும் வண்ணமயமாக இருந்தது. கூட யாரும் உதவிக்கு கூட இல்லை..

உள்ளே நுழைந்த என்னை மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தார்.

"வாங்க! வாங்க! என்ன சாப்பிடுறீங்க?", என்று கேட்டவரை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு இருமிக்கொண்டே எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.

""என்ன டாக்டர்? "லொக்கு" இப்படி கேக்குறீங்க?"" "லொக்கு" என்றவுடன்,

"ஓ சாரி சாரி... ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்க ஒரு நோயாளி வந்தவுடன் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல...... அதான்....

சரி சரி என்ன பிரச்சனைனு சொல்லுங்க?"

அங்கே அவருக்கு அருகில் பல வண்ணங்களில் டப்பா டப்பாவாக வைக்கப்பட்டிருந்த பொடிகளைப் பார்த்தவாறே,

"கொஞ்சம் சளியும் "லொக்கு" காய்ச்சலுமா "லொக்கு" இருக்குங்க டாக்டர்... இருமல் தொடர்ந்து இருந்துக்கிட்டே "லொக்கு" இருக் "லொக்கு" கு...", என்றேன்......

"சரி சரி நான் பார்த்துக்கிறேன்", என்றவர் ஒரு சிறிய டப்பாவை எடுத்தார்..

"இப்ப நான் ஒன்னொன்னா கேக்கிறேன்.. கொஞ்சம் யோசிச்சு பொறுமையா பதில் சொல்லுங்க",

"சரிங்க டாக்டர்.."

"காலையியே இருந்து சுமாரா எத்தனை தடவ இருமி இருப்பீங்க...."

அவரது முதல் கேள்வியிலேயே ஆஃப் ஆகிவிட்டேன்...

"ம்.. டாக்டர் அதெல்லாமா கணக்கு வச்சுக்குவாங்க...."

"இங்க பாருங்க.... நான் கேக்கற எல்லா கேள்விக்கும் நீங்க கரெக்ட்டா விடை சொன்னாத்தான் நான் உங்களுக்கு சரியான மருந்து தரமுடியும்.. ஏன்னா நான் ஒரு டாக்டரு...", என்று சொன்னவரை நான் என்னென்று சொல்ல...

"ம்... ஒரு நூத்தியெட்டு தடவ இருமியிருப்பேங்க..."

"108..... ஹா ஹா..." என்று சிரித்த படியே... "ஓ.... அப்படியா" என்றவாரே சட்டென எழுந்தார்... அவரது டேபிளின் மேலேறி அவரது பின்னாடி ஷெல்பின் மேலே இருந்த சிவப்பு கலர் டப்பாவை எடுத்தார்...

முன்னே எடுத்த காலி டப்பாவை எடுத்து திறந்து வைத்துக்கொண்டவர்... சிவப்பு கலர் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு பவுடரை கொஞ்சமாக கொட்டினார்....

நான் 'ஙே' எனப் பார்த்துக்கொண்டிருந்தேன்....

பின் அவர்,

"நீங்க இருமும் போது வாய கைய வச்சு மூடுனீங்களா இல்லையா", என்றார்..

இந்த அடுத்த கேள்வி எனக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியது...

'இதெல்லாம் கூட சொல்லனுமா டாக்டர்...' என்று நினைத்துக்கொண்டே... "இல்ல டாக்டர்... சில சமயம் மூடியிருப்பேன்... சில சமயம் அப்படியே இருமியிருப்பேன்..", என்றேன்...

"ஓ ஓகே ஓகே" என்றவர்...

இடது பக்கமிருந்த ஒரு பச்சை டப்பாவையும், ஒரு மஞ்சள் டப்பாவையும் எடுத்தவர்... முன்னே வைத்திருந்த டப்பாவில் இதிலே கொஞ்சம் அதிலே கொஞ்சம் கொட்டினார்....

நான் அவரின் அடுத்த அதிரடி கேள்விக்காக காத்திருந்தேன்...

அப்பறம்....

"இன்னைக்கு மத்தியானம் தூங்குனீங்களா...?", என்று அடுத்த தாக்குதலைத் தொடர்ந்தார்...

"ம்.. சாப்பிட்டு அசதியா இருந்துச்சா... அதான் கொஞ்சம் அசந்துட்டேன்.."

"ஓ சரி சரி", என்றவர்.. ஊதா நிற டப்பாவை எடுத்து அதிலிருந்த பவுடரையும் கொஞ்சம் கொட்டி கலக்கினார்...

"அப்பறம்.. மத்தியானம் சாப்பிட்டீங்கல்ல‌.... அது வெஜ்ஜா நான் வெஜ்ஜா", என்றார்....

"டாக்டர்! நான் வெஜ் தான்..."

"நீங்க வெஜ்ஜா நான்வெஜ்ஜானு கேக்கல... நீங்க சாப்பிட்டது என்னானு கேட்டேன்..."

"அதான் டாக்டர் சொன்னேன்.. நான் வெஜ்ஜுனு.."

"நான் வெஜ் தானே...."

"நீங்க என்னானு எனக்கு எப்படி தெரியும் டாக்டர்.. நான் சாப்பிட்டது என்னவோ நான்வெஜ் தான்..."

"ஓகே ஓகே....", என்றவர்... கருப்பு டப்பாவைத் தேடினார்....

அதிலிருந்தும் கொஞ்சம் பவுடரைக் கொட்டிக் கலந்தார்....

நான் அவரை முறைத்துக் கொண்டிருந்தது அவருக்கு தெரிந்ததோ என்னவோ...

"இன்னும் ஒரே ஒரு கேள்வி தான்.. சரியா...?", என்றவுடன்...

நிம்மதியாக பெருமூச்சு விட்டவாறே, அவரது அடுத்த சுனாமிக்குத் தயாரானேன்...

"நீங்க மதியானம் தூங்கும் போது இடது பக்கம் தலைவச்சு படுத்தீங்களா இல்ல வலது பக்கம் தலைவச்சு படுத்தீங்களா...?"

"டாக்டர்..............!!!", என்று கத்தியே விட்டேன்....

"இங்க பாருங்க... இது தான் முக்கியமான கேள்வி..இதுக்கு மட்டும் நல்லா யோசிச்சு கரெக்ட்டான பதிலா சொல்லுங்க..."

"ம்... இடது பக்கமாத்தான் டாக்டர் தலையை வச்சு படுத்தேன்..."

"ஓகே ஓகே வெரிகுட்", என்றவர்... சாம்பல் நிற டப்பாவிலிருந்த பவுடரையும் போட்டு அதில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து மிக நன்றாகக் கலக்கினார்....

"டாக்டர்! இப்பவாவது சொல்லுங்க..... எனக்கான மருந்து தயாரா... என்னுடைய பிரச்சனைகள் சீக்கிரம் தீர்ந்திடுமா...", எனக்கேட்டுக் கொண்டிருக்கும் போதே....

நன்றாக கலந்த டப்பாவை அழகாக மேலே தூக்கி அப்படியே தன் வாய்க்குள் ஊற்றிக் கொண்டார்....

"டாக்டர்.. என்னாது நீங்க குடிச்சுட்டீங்க....!!!"

"ஆமா தம்பி... உங்க உடம்புக்கு ஏதோ சிக்கலான பிரச்சனை இருக்கு போல.... அத குணப்படுத்தனும்னா எனக்கு இன்னும் கொஞ்சம் நல்ல ஸ்டெரெந்த் வேணும் ... அதான் நான் குடிச்சுட்டேன்... நீங்க என்ன பண்றீங்கன்னா நாளைக்கு இதே நேரத்துக்கு என் கிளினுக்கு வாங்க.... இன்னும் சில புது கேள்விகள் தயார் பண்ணி வைக்கிறேன்... அதெல்லாம் கேட்டவுடனே உங்களுக்கான மருந்த கொடுத்தர்றேன்... சரியா"... என்றார்... அந்த டாக்டர் போலி....

அங்கிருந்து ஓட்டம் பிடித்தவன் தான்.... இதுவரை அந்தப்பக்கம் போகவே இல்லை...

நீங்க வேணா ஒரு தடவை அவரோட கிளினுக்கு போயி பாருங்களே மகா ஜனங்களே...!!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Aug-15, 6:18 pm)
பார்வை : 263

மேலே