மழையும் நானும் பாகம் 1

இந்த உலகத்துல என்னோட அப்பா அம்மாவுக்கு அடுத்ததா நான் அதிகம் நேசிக்கிற விஷயம் மழை. என்னோட வயசு பசங்க கல்யாணத்துக்கு காஞ்சிக் கிடக்கிறானுக, வருங்கால மனைவியை நினைத்து கனவு கான்கிராணுக , ஆனால் நான் ?

மழையை நினைத்து கனவு காண்கிறேன். உண்மையிலேயே மஜ்னு லைலா மேல வச்சிருந்த காதல் டிரைல் தானுக. நான் மழை மேல வச்சிருக்கிற காதல் டெஸ்ட் மேட்ச் மாதிரி முடிவே கிடையாது.

மஜ்னு அவனோட காதலியின் ஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த ஊரில் உள்ள சுவர்களை முத்தமிடுவானாம் காரணம் கேட்டால் என் காதலி லைலா இருக்கும் ஊரில் இந்த கொடுத்து வைத்த சுவர் இருக்கிறதே என்று கவிதை பாடுவானாம்.

மஜ்னு என்றால் பைத்தியம் என்று அர்த்தம் ஆம் அவன் லைலாவின் பைத்தியம். அவள் மேல் அவ்வளவு காதல் வைத்திருக்கிறானே அவள் என்ன அவ்வளவு அழகா ? என்று நமக்கு எண்ணம் தோன்றும். ஆனால் லைலா ஒரு கருப்பு பெண், பரட்டை முடி, தடித்த உதடு , கற்பனை செய்து பார்க்க கூட நமக்கு தைரியம் இல்லை.

மழை...

இதயத்தின் சாளரம்
வாழ்கையின் தத்துவம்
இறைவனின் கருணை
இவ்வுலகின் அர்த்தம்
இறைவன் நாடினால்
நம் பாவத்தின் சாபம்

அன்று மாலை , எப்படியும் ஐந்து மணி இருக்கும், சில நாட்களாகவே எனது தாயார் உடல் நிலை சரியில்லாமல் படுத்திருந்தாள். அந்த சில நாட்கள் சமையல் எல்லாம் எனது தந்தைதான் செய்வார். அவர் எங்களுக்கு தந்தை என்றால் எங்கள் அம்மாவுக்கு அவர்தான் தாய். கறார் பேர்வழி, ஆனால் எல்லோரிடமும் அன்பாக பழகுவார். எனது தந்தை வீட்டில் இருந்தால் எனது நண்பர்கள் எங்கள் தெருவுக்குள்ளேயே வர மாட்டார்கள்.

எனது அம்மாவுக்கு தேநீர் என்றால் கொள்ளைப்பிரியம், எங்கள் வீட்டிலும் சரி கிராமத்திலும் சரி காலை மாலை யில் தேநீர் தயாரிப்பது வழக்கம், அதுவும் உடல் நிலை சரியில்லாத காலங்களில் எனது தாயாருக்கு தேநீர்தான் முக்கிய உணவு.

எனது தந்தை பால் வாங்கி வருமாறு சொன்னார், நானும் எனது சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றேன், எங்கள் கிராம கடைத்தெரு மிகவும் பெரியதல்ல மிஞ்சிப் போனால் குட்டி குட்டியாக இருபது கடைகள் இருந்தன அந்த காலத்தில் ( அதாவது பத்து வருடங்களுக்கு முன்னர் )

அன்று எனது கிராமத்தில் இருந்த எந்த கடையிலும் பால் கிடைக்க வில்லை. வீட்டிற்கு வந்து பால் எங்குமே இல்லை என்றேன், என் தாய் சொன்னால் அப்படியெனில் பவுடர் வாங்கி வருமாறு. மீண்டும் கடைக்கு வந்தேன் , எந்த கடையிலும் பால் பொவுடர் கிடைக்கவில்லை, எதுவும் இல்லாவிட்டால் என்ன செய்வது , பக்கத்து கிராமத்தில் ஒரு சிறிய மளிகை கடை இருந்தது சைக்கிளை நேராக அங்கு ஒட்டி சென்றேன் , அந்த பக்கத்து கிராமம் ஒரு கி. மி இருக்கும். அங்கு கேட்டால் , பாலும் சரி பால் பவுடரும் சரி உடைய நாட்டில்தான் கிடைக்கும் என்றார் ( அதாவது எனது கிராமத்தில் ) . நானே அங்கிருந்துதான் வருகிறேன் என்றேன் , அப்படியெனில் பேராவுரணி தான் செல்ல வேண்டும் என்றார் அந்த கடை காரர். பேராவூரணி எழு கிலோ மீட்டர் இருக்கும். என் அம்மாவை நினைத்துப் பார்த்தேன். அவ்வளவுதான் சைக்கிளை பேராவூரணிக்கு விட்டேன்.

இப்போதே மணி 5: 45 ஆகி விட்டது எப்படியும் இருட்டி விடுவதற்குள் வீடு போய் சேர வேண்டும். மிக மிக வேகமாக சென்றேன், எனது சக்திக்கு மேல் வேகமாக சென்றேன். ஆறு மணிக்கு பேராவூரணியில் இருந்திருப்பேன். 1/4 லிட்டர் பாக்கெட் இரண்டு வாங்கினேன் எனது தந்தை பத்து ரூபாய்தான் கொடுத்தார் , மீதம் இரண்டு ரூபாயை கைலியின் மடிப்பில் சொருகிக் கொண்டு சைக்கிளை விரட்ட ஆரம்பித்தேன், ஆனால் குறிப்பிட்ட தூரம் வரும்போது எனக்கு இழைக்க ஆரம்பமானது, கால் மூட்டு வலிப்பது போல இருந்தது, இப்போதே கால் வாசி இருட்டிவிட்டது , முழுவது இருட்டிவிட்டால் பாதை ஒன்றுமே தெரியாது , போதா குறைக்கு செல்லும் வழி எங்குமே வயல் காடு. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. கொஞ்சம் வேகம் அதுகரித்தது.


மேகம்.
மேகம் கருப்பாக மாறியது, காற்று குளிர்ச்சியாக அடித்தது, ரோட்டில் கிடக்கும் புழுதிகள் அங்கும் இங்கும் அலை மோதின, மரங்களும் தலையசைக்க ஆரம்பித்தது. என் பின்னால் சட சடவென சத்தம் கேட்டது வேகமாக சென்று கொண்டிடுக்கும் நான் எதோ வாகனம் தார் பாயை ரோடில் இழுத்துக் கொண்டு வருகிறது என நினைத்து சைக்கிளை கொஞ்சம் ஓரம் கட்டினேன். சர்.......................................
மழை.

ஆகா என சொல்லிக்கொண்டே வேகத்தை அதிகரித்தேன், 6:30 மணிக்கு தொப்பல் தொப்பலாக வீட்டு வாசலில் வந்து சைக்கிளை நிறுத்த கூடவில்லை படார் என உடைத்துவிட்டு வீட்டுக்குள் தாவி புகுந்தேன்,

அரிசி புடைக்கும் சொளவு என் தந்தைக்கு அருகில் இருந்திருக்கும் போல நான் உள்ளே நுழைந்ததர்க்கும் அது என் மேல் விழுந்ததற்கும் நேரம் சரியாக இருந்தது, சும்மாவே எனது தந்தை கண்ணா பின்னா என கத்துவார், இப்போது சொல்லவா வேண்டும். நடந்ததை எடுத்துக் கூறி விளக்குவதற்குள் விளக்கில் ஊற்றி இருந்த மண்ணெண்ணெய் முடிந்து போய் வீடு கும் இருட்டானது.

இரண்டாவது பாகமும் தயார். விரைவில் பதிவிடுகிறேன் ( இறைவன் நாடினால் )

பின் குறிப்பு : புகைப்படம் எனது கிராமத்து தேநீர் கடை

எழுதியவர் : தமிழ் ஹாஜா (24-Aug-15, 10:52 am)
சேர்த்தது : ஹாஜா
பார்வை : 600

மேலே