நிலவுடன் ஓர் உரையாடல்
எண்ணங்கள் எனக்குள் பலகோடி
-- என்றும் உள்ளத்தில் உருண்டோடி
சிந்தையில் என்னுடன் உரையாடி
-- சிந்திக்க வைக்கின்றன உறவாடி !
சீர்மிகு சிந்தனைகள்சில சிதறியபடி
-- சிறப்புமிகு வரிகளாய் பிறந்தபடி
வாசமிகு கவிதைகள் படைத்தப்படி
-- பாசமிகு நெஞ்சமுடன் பகிர்ந்தபடி !
வீரியம் மிகுந்த வார்த்தைகளடி
-- விவேகம் நிறைந்த வரிகளடி
விரசமே காணாத கவிதைகளடி
-- வீரம் வழிந்திடும் படைப்புகளடி !
சமுதாயப் பார்வையே என்முதல்படி
-- சமூக ஒற்றுமையே என்கண்களடி
சமத்துவ சமூகமே என்எண்ணமடி
-- சமாதான நிலையே என்விருப்பமடி !
சாதிகளே இல்லா சமுதாயமடி
-- சச்சரவே எழாத உலகமடி
என்கின்ற நிலை உருவாகும்படி
-- எந்தன் உள்ளமும் விரும்புதடி !
வறுமை நீங்கிட்டப் புவிதானடி
-- வற்றாத ஆறுகள் நிலைத்தப்படி
வளமும் செழிப்பும் கொழிக்கும்படி
-- வண்ணக் கனவுகளே வருகுதடி !
பலித்தால் மகிழ்வேன் நிச்சயமடி
-- பாடிடுவேன் பாடல்கள் நித்தமடி !
உள்ளதை சொன்னேன் உன்னிடமடி
-- உள்ளத்தைத் திறந்தேன் உண்மையடி !
( நிலவை ஒரு பெண்ணாக நினைத்து
கற்பனையில் உரையாடியவை இவ்வரிகள் )
பழனி குமார்