புகழைத்தொடு
பிறருக்காக உழைத்திடு மனிதா
பருதியும் உனக்கு நிழல்கொடுக்கும்
பிறஉயிர் காக்க பாடுபட்டாலந்த
பால்வழி அண்டமும் குடைபிடிக்கும்
வருகையில் எதைநீ கொண்டுவந்தாய்
பிறர்பொருள்களை நீஏன் கவருகின்றாய்?
வஞ்சனையாகவே கணக்கிட்டு தினம்
வாழ்வைத் தொலைத்து ஆடுகின்றாய்
இறுதியில் எல்லாம் முடிந்துவிடும்
இனியமூச்சும் ஓடி மறைந்துவிடும்
இடையில்கட்டியக் கயிறும் உனக்கு
இல்லாமல் உறவுகள் செய்துவிடும்
உன்னைச் சுற்றிய உறவுகலெல்லாம்
ஒப்புக்கு வந்து சூழ்ந்துவிடும்
உன்மேல் முழுதும் மாலையிட்டு
உடலைத் தூக்கிச்சென்று தீயிலிடும்
கட்டியமனைவியும் கண்ணானப் பிள்ளையும்
கதறியழுதுப் பின் ஓய்ந்துவிடும்
கண்டுவணங்கிய உறவுகள் உன்மேல்
கட்டுகள் போட்டு கதைமுடிக்கும்
சுட்டதுசட்டி விட்டது கையென்று
வேடிக்கைக் கேளிக்கைக் கொண்டாடும்
சேர்த்துநீ வைத்தசொத்தின் கணக்கில்
லாபமும் நட்டமும் பார்த்துவிடும்
இருந்திடும் சிலநாள் வாழ்வினிலே
இளமையும் சிலநாள் உணர்ந்துவிடு
இன்றே மனதில் நன்மைசெய்ய
இனிய முடிவெடு புகழைத்தொடு.
எழுதியவர்
பாவலர் . பாஸ்கரன்