பரீட்சைக்கு நேரமாச்சு- நகைச்சுவைக் கதை
................................................................................................................................................................................................
“ என்னங்க..! எந்திரிங்க..! தயார் பண்ணிட்டீங்களா? ”
“ ஊம்..ஊம்.. ”
“ என்ன ஊம்.... ஊம்? ஊவோட முதுகுல ‘ள’ வைக் காணோம்.. ஒரு கைப்பிள்ளைக்காரியை இப்படியா அம்போன்னு விடுவீங்க? ”
“ என்னது? தங்கச்சி வந்துருக்காளா? அவதானே கைப்பிள்ளைக்காரி? ”
“ உக்கும்..! பாதி தூக்கத்துல கேட்டா இப்படித்தான்..! பரீட்சை நடக்குது..! உங்க தங்கச்சியை அடுத்த வாரம் வரச் சொல்லிட்டேன்..! நான் சொன்னது ஊ எழுத்தைப் பற்றி..! எப்பவுமே புள்ளையை சுமந்து கிட்டே அலையறா..! ”
“ ஹூம்.. உன்கிட்ட இதுதான் தொந்தரவு..! அஃறிணையை சொல்றியா, உயர்திணையைச் சொல்றியா? - ஒரு மண்ணும் புரியாது..! என் தங்கச்சி ஊர்மிளாவையே ஊன்னுதானே நீ கூப்பிடுறே? ”
“ நான் வேலையை முடிச்சிட்டேன்..! நீங்க எந்திரிங்க..! என்னங்க..? ஐயோ.., எந்திரிச்சி தொலைங்க..! ”
“ இன்னுமா நான் எந்திரிக்கல? எந்திரிச்சி பல்லு விளக்கி, குளிச்சி, ரெடியா புத்தகத்தோட உட்கார்ந்திருக்கேனே? ”
“ இதுதான் புத்தகமா? தலையணையை தூக்கி கீழே வைங்க..! கனவு கண்டிருக்கீங்க..! ”
“ அது.... ராத்திரி ஒரு மணியாயிடுச்சி மீனா..! நீ சொன்னதெல்லாம் செஞ்சு முடிக்க..! ”
“ ஆமா.. நான் என் வேலையவா செய்யச் சொன்னேன்? அலட்டிக்கிறீங்க..! பூச்சியோட வாழ்க்கை சுழற்சி நெட்டுல எடுக்கச் சொன்னேன். அந்த பிரிண்ட் அவுட்டை சார்ட்டுல ஒட்டணும்..! ஒரு பூச்சிய பிடிச்சி குளோரோஃபார்ம் பாட்டில்ல போட்டு அடைக்கணும்.! ஏதாவது ஐந்து வடிவங்கள்.. அட்டையில செய்யணும்..! ஐந்து நிறங்கள் ஐஸ் குச்சியில சுத்தி கொடுக்கணும்.. ”
“ ஹூம்..! எல்.கே. ஜி. படிக்கிற நம்ம கனகாவுக்கு இன்னியிலேர்ந்து பரீட்சை..! முதல் பரீட்சை தமிழ்..! அதுக்கு என்னை பெண்டு கழட்டுற நீ..! ”
“ நம்ம கனகா ஒரு பூச்சியப் பிடிச்சிட்டு நிக்கிற மாதிரி போட்டோ எடுத்து அதையும் கொடுத்து விடணுமாம்..! அப்பத்தான் குழந்தைக்கு யதார்த்தம் புரியுமாம்..! ”
“ அது சரி..! நாளைக்கு இவங்க சிங்கத்தைப் பத்தி பாடம் எடுப்பாங்க..! குழந்தை சிங்கத்தோட நிக்கிற போட்டோ வேணும்னு கேட்பாங்களா? ”
“ உஷ்..! இதெல்லாம் பிராக்டிகல்ஸ்.. பூச்சியப் பத்தி நாலு வரி அவ அங்க போய் சொல்லணும்..! உயிரெழுத்து சொல்லணும்..! ரெண்டு திருக்குறள் சொல்லணும்.. சுய அறிமுகம் சொல்லணும்.. இது ஓரல்ஸ்...! டீச்சர் ஒரு நாப்பது வார்த்தைகள் எழுதிக் கொடுத்திருக்காங்க..! பேப்பர்ல எழுதணும்.. அது எழுத்துத் தேர்வு.. ”
“ அம்மாடியோவ்..! நாப்பது வார்த்தை இவ எப்படி எழுதுவா? ”
“ அது எங்களுக்குத் தெரியாதா? பரீட்சை நாளில் எங்க வெப்-சைட்டை ஓபன் பண்ணா, காலை ஏழிலிருந்து ஏழேகாலுக்குள்ள நோடிபிகேஷன் தருவோம்..! ஒரு பத்து வார்த்தைகள் வந்திருக்கும்..! அத மாத்திரம் எழுதத் தெரிஞ்சிட்டு வந்தா போதும்’- னு அவங்க ஸ்கூல்ல சொல்லிட்டாங்க..! ”
“ இது வேறயா? ”
“ மசமசன்னு இருக்காதீங்க..! ஏழாகால் மணிக்கு மேலே சர்வர் க்ளோஸ் ஆயிடும்..! ”
“ வர வர எல்கேஜி பரீட்சை ஐஏஸ் ஐபிஸ்ஸை விட கஷ்டமா போகுதே? ”
“ அந்தப் பரீட்சையெல்லாம் பிள்ளைங்க படிச்சா போதும்..! இது பெத்தவங்களும் படிச்சாகணும்..! ”
“ ஏங்க, அகர முதல எழுத்தெல்லாம்..ன்னா நம்ம குழந்தை அகர மொகரங்குறா..! உச்சரிப்பு சரியில்லேன்னு டீச்சர் சொல்றாங்க..! ”
“ ஒரு வேளை அவங்க முகத்தைப் பத்தி சொல்றதா நினைச்சுட்டாங்களோ? அடப்பாவி..! குழலையும் யாழையும் பின்னுக்குத் தள்ளுறதே அதுதான்..! உச்சரிப்பு சரியில்லேயாம்..! ”
“ ஏற்கெனவே அவ நல்ல மார்க் வாங்கலைன்னு நாலு பேர் எதிர்ல அவ மிஸ் நம்மளை கூப்பிட்டு திட்டுனது ஞாபகமில்லையா? வீட்டுல நீங்க என்னதான் செய்றீங்கன்னு கேட்கறாங்க..! ”
“ ப்ரஷ்ஷா காலை ஒன்பது மணிக்கு ஸ்கூலுக்குப் போற குழந்தை சாயந்திரம் மூணு மணிக்கு வாடி வதங்குன கத்திரிக்காயா வந்து விழறா..! ஸ்கூல்ல இவங்க என்ன சாதிக்கிறாங்களாம்? அன்னைக்கு என்னடான்னா டிஸ்டிரிக்ட்ஸ் ஆஃப் தமிழ்நாடு எழுதிட்டு வந்தா.. இதெல்லாமா எல்கேஜியில வருதுன்னு கேட்டா ஒண்ணாம் கிளாஸ் போர்ஷனாம்..! எல்கேஜி மிஸ் லீவுல போயிட்டாங்களாம்..! எல்கேஜி குழந்தைங்களையும் ஒண்ணாம் கிளாஸ்ல தூக்கிப் போட்டு ஒண்ணாம் கிளாஸ் பாடம் எடுத்திருக்காங்க..! ”
“ இதாவது பரவாயில்லை..! இந்த மிஸ் ஏதோ கிளாஸுன்னு எடுக்கறாங்க..! ஞாபகம் இருக்கா..? போன மாசம் நம்ம பொண்ணு ஸ்கூல் விட்டு வந்த உடனே சட்டுன்னு திரும்பி கீப் கொயட்டுன்னு சொல்லிட்டு ஒரு சோப்பு டப்பாவை எடுத்து காதுல வச்சுட்டு ஹலோ எப்படி இருக்கே..? இது எத்தனாவது மாசம்? மாமியார் வந்தாச்சான்னு மொபைல் ஃபோன்ல பேசுற மாதிரியே கலாய்ச்சாளே.., உங்களுக்கும் எனக்கும்தான் மாமியார் பாத்தியதை இல்லையே..! எங்கிருந்து இவ இந்த டயலாக்கை பிடிச்சாள்னு நமக்குத் தெரியாதா? இதை எல்லாம் போய் கேக்க முடியுமா? நம்ம மேல உள்ள கோபத்தை நம்ம குழந்தை கிட்ட காட்டிட்டா என்ன பண்றது? ”
“ விளையாடவே விட மாட்டேங்கிறாங்களாம்..! இத்தனைக்கும் இவளுக்கு நீச்சல், கராத்தே எல்லாம் கத்துத் தருவோம்னு சொல்லி தனியா ஃபீஸ் வாங்கினாங்க; இதுக்குன்னு டிரஸ் வேற..! இப்ப நீச்சல் கராத்தேக்கு பரீட்சை வச்சிருக்காங்க..! கேள்வி கேப்பாங்களாம்; பதில் எழுதணுமாம்....! ”
“ எக்ஸாம் முடிஞ்சு ஃபீல்டு விசிட் இருக்காம்..! பக்கத்து தெரு பேக்கரிக்கு..! ஐம்பது ரூபாய் கொடுத்தனுப்ப சொல்லியிருக்காங்க..!”
ஆறு மணிக்கு அரும் பாடுபட்டு குழந்தையை எழுப்புகிறார்கள்.
“ஆனா ஆவன்னா சொல்லு..! ” அரைத் தூக்கத்தில் அப்பா கேட்கிறார்..
“ அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஜெ கெ எல் எம் என் ஒ ஓ ஔ.. ”- அரைத் தூக்கத்தில் குழந்தை..!
“ குட்..! வெரிகுட்..! ”
அப்பாவும் மகளும் அப்படியே தூங்கி விடுகிறார்கள். அப்பாவின் கனவில் புத்தகம் பள்ளி எல்லாம் ஒன்று சேர்ந்து ராட்சச டைனோசாராகி குழந்தையை விரட்டிப் போய் கடித்து விழுங்குகிறது..!
பள்ளி வேன் வருகிறது. தாய் தூங்குகிற குழந்தையை தந்தையின் மார்பிலிருந்து பிடுங்கி வேனில் ஏற்றுகிறாள்..!