தியாகி கோ முத்துக்கருப்பன்

அறிவுக் கண்களால்
தமிழ் மண்ணை அளந்து
பொதுவாழ்வில்
நற்செயலை விதைத்தவரே!
தங்களை வாழ்த்துவதால்
இந்த அடியேனுக்கும் பெருமை!
இறைசெயலை தன்செயலாய்
தரணிபோற்றும் அளவிற்கு
தன்மானமாய் வாழ்ந்துகாட்டிய
நல்லத்தியாகியே – நீர்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
நீர் ஒர் அதிசயப் பிறவிதான்!
பொதுவாழ்வுக்காகவே
தன்னை அர்பணித்து
தள்ளாத வயதிலும்
தொடர்ந்து பணியாற்றி
இளைஞர்களுக்கு முன்மாதிரியாய்
இருந்து வருவதால்!
குடும்பத்தைவிட
குல தெய்வத்தைவிட
தமிழ் மொழிமீது
நீர்கொண்ட பற்று
பரமசிவனையும்
திரும்பிப் பார்க்க வைக்கிறது!
தமிழ்மொழி காக்க
பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில்
வருடந்தோறும்
காந்தி மண்டபம் முன்பாகத்
துவங்கும் வாகன ஊர்திப் பயணத்தில்
தலையாய் நின்று
பலரை அழைத்துவந்து
உற்சாகமூட்டும் நின்செயலால்
தமிழும் புத்துயிர் பெறுகிறது!
செல்வச் செழிப்பாய் வாழாமல்
தமிழர் பண்பாட்டில் வேட்டி சட்டை
கழுத்தில் வெள்ளைத் துண்டுடன்
சாதாரண உடையில்
காலம் முழுவதும்
கால் நடையாய் நடந்து
இலக்கியத் தளத்திலும்
போராட்டக் களத்திலும்
பங்காற்றி வருவது
இளையோர் பலரை
வியப்பில் ஆற்றுகிறது!
சொகுசு வாழ்வும்
ஆடம்பரச் செலவும் புரிவோர்க்கு
விதிவிலக்காய்
தமிழர்களை நேசித்தது மட்டுமின்றி
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காய்
மதுரையிலிருந்து எழு நாட்கள்
பாம்பன் பாலம் நோக்கிய
நடைபயணத்தில்
கைது செய்யப்பட்ட நிலையில்
நின் தியாகத்தை வியக்கிறேன்!
நல்ல மரம்
கனி காலத்தில் கல்லடிபடும்.
நல்ல வாழ்வும்
காலத்தால் சோதிக்கப்படும்.
அவசரநிலைப் பிரகடனத்திற்குப் பின்பு
இந்திரா காங்கிரசு சார்பில்
யாரும் போட்டியிட முன்வராதபோது
சோதனையிலும் வேட்பாளராய் நின்று
காங்கிரசுக்குப் பெருமை சேர்த்தாய்!
சதி மதங்களின்
வேர்களைக் களைந்துவிட்டு
கலகம் விலகி அமைதி மலர
1982 மதக்கலவரத்தின்போது
ஊமைகளுக்கு சைகைகள் போதும்
ஒலிபெருக்கிகள் வேண்டாம்.
ஒட்டடை துடைக்கக் குச்சிகள் போதும்
வெடிகுண்டுகள் வேண்டாம் என்று
மதநல்லிணக்கம் வேண்டி
அறிக்கையிட்டாய்!
அமைதி கொண்டு வந்தாய்!
இளையவரைகூட அலைபேசியில்
கனிவான் குரலில்
அமைதியாய் அழைத்து
தம்பி ஒரு நிகழ்வு வைத்திருக்கிறேன்
என்று அழைக்கும்போதே
மனதை இளகிடச் செய்கிறது.
கவி சக்கரவத்தி
கண்ணதாசன் பெயரில்
மன்றம் ஒன்றினை நிறுவி
அவர் புகழ் மலரவும்
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பை நிறுவி
கருத்தரங்குகள் நடத்தி
விழிப்புணர்வு அடையச் செய்தாய்!
தமிழ் மொழிமீது பற்றுகொண்டு
குமரி மண்ணை
தாய் தமிழகத்தோடு சேர்க்க
போராடியதன் காரணமாக
தியாகி என அழைக்கப் பெற்றாய்!
தங்கள் செயல்
குமரி மண்ணிற்குப் பெருமை!
தங்கள் பணி
தமிழ் மண்ணிற்கு அருமை!
தங்கள் செயலை நினைத்து
மனம் மகிழ்கிறது!
தாங்கள் என்றும் பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறேன்!