பொறுமையின் சிகரங்கள்

பொறுமையின் சிகரங்கள்.

வெள்ளைக் களிற்றின் மேலேறி அமர்ந்த
பிள்ளை முகங்கொள் இளம் புத்தன்
வள்ளல் கரத்தனன் என்றுல குணர்த்திட
பள்ளி கொள்ளவே எழுப்பிய கோயிலில்;

கோயில் நடையினை சாத்திட எண்னிய
வாயிலைக் காத்திடும் துறவி அவரிடம்
வாயிலே பீடியை கடித்த வண்ணமாய்
வாயிலில் படுத்திட அனுமதி கேட்டனன்.

உள்ளே சென்றிட்ட உற்றநற் துறவியின்
உள்ளக் கமலம் முகக்கமலம் ஆனதால்
வெள்ளிவிழா கண்ட தலைமைக் குருவிடம்
அள்ளல் மனிதனின் அவல நிலை சொல்ல;

நித்தமும் நியமக் கடன்கள் நிரப்பி
பைத்த புண்ணிய புத்த விகாரமதில்
வைத்தே அவனைப் பாங்குறப் பேணிட
கைத்தல் அறுத்த அண்னலும் கூறிட;

தகையது செய்திட்ட தலைமை தன்னின்
தகைமையை வியந்து தனியே படுத்தனன்
பகையேது மில்லா பரமனின் சீடனும்
நகைமுகம் தரித்து நடந்தனன் அப்பால்.

பகவனால் பவத்திறம் அறுத்த சீடர்கள்
சிகரியாய் நித்திரை செய்யுங் காலையில்
ககனமே கரிந்து கவிந்ததைப் போலவே
முகமெலாம் கரியுடன் மூச்சும் திணறினர்.

புகையது பூதமாய் புடைத்து எழுந்திட
வதையது செய்தவர் யாரெனும் நோக்கில்
வகையது வந்த விதத்தினை ஆய்ந்திட
பகையுடன் வாளினை எடுத்து ஏகினர்.

விறகுக் கட்டையோ எரியும் பூரமோ
சிறிதும் இல்லா கோயிலின் நடையினில்
புகையது வருவதன் காரணம் கண்டனர்
நகைத்தனன் நல்ல கிழவனும் நாணியே.

குளிரினைப் போக்கும் சாதனம் தேடி
வெளிறிய புத்தன் சிலைகளில் ஒன்றை
மிளிரும் நெருப்பினில் இட்டு எரித்திட்டு
குளிரது காய்ந்த குடிலனை நோக்கினர்

நம்பி வந்தோர்க்கு நல்லது செய்தீர்
எம்பிழை ஏதும் இல்லை இங்கென்றிட
கம்பும் கையுறு கோலும் கொண்டவர்
உம்பர் உலகுக்கு அனுப்பினர் அவனை.

மரமெனக் கண்டது மடையனின் தவறா
மரமது மறையவன் உடலெனும் பிழையா
மரமது எரிந்து மறைபொருள் மறைந்து
மரமென நிற்றனர் மறையதன் சீடர்கள்!.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (3-Sep-15, 1:28 pm)
பார்வை : 75

மேலே