பெண்மலர்…

மென்மனப் பூவது
சொன்னதைக் கேட்டிருக்
கைவிரல் மண்ணிலே
நட்டதே நன்விதை!!

நன்விதை தானமர்
மென்மணல் மீதினில்
என்மன மாடவே
இன்பொடு நீண்டது !

நீண்டது, நீண்டதன்
தண்டதில் மெல்லிலை!
மெல்லிலை நீண்டதில்
மெல்லிசை மூண்டது!

மெல்லிலை நீண்டதும்
எவ்விதம் பூவரும்?!
என்றுநான் மெல்லமாய்
எண்ணிணேன்! ஏங்கினேன்..!!

ஏங்கினேன்! தூங்கினேன்!!
தூங்குமோ என்னவா?!
தூங்கிடும் கண்ணிலும்
மெல்லிலை மென்கனா!!

மென்கனா மெல்லமாய்
என்துயில் நீக்கிட,
மின்னலாய் என்செடி
பூத்ததா? தேடினேன்!

என்செடி பூத்ததா
கண்கவர் பூவிது?!
பெண்மலர் பூவிதைக்
கண்டதே யில்லையே..?!

கண்டிடா கண்கவர்
பெண்மலர்ப் பூவதன்
மெல்லிதழ்ப் பூவதால்
என்னிதழ் பூத்தது!!

மெல்லிதழ்ப் பூவுடன்
கண்கவர்ப் பூவது,
கண்மலர்ப் பூவதும்
பூத்ததே! எங்ஙனம்?!

என்செடி பூத்ததா?
என்மனம் ஏய்க்குதா?
மெல்லமாய் என்விரல்
கிள்ளினேன்! துள்ளினேன்!!

துள்ளினேன்! துள்ளினேன்!!
துள்ளலைக் கண்டதும்
நன்மலர் மெல்லமாய்
என்னிடம் வந்ததே..!!

என்னிடம் வந்தது
என்செடிப் பூவென
எண்ணினேன்! வந்தது,
பெண்ணதால் வெட்கினேன்...!! :) :)


********************************
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (3-Sep-15, 2:25 pm)
பார்வை : 2141

மேலே