உடைந்த கட்டில்

அதிகாலைகளோடு எனக்கு அதிகப் பரிச்சயம் இல்லை. இதுவரையிலான முப்பத்திரண்டு வருடங்களில் ஒட்டுமொத்தமாக முப்பத்து மூன்று அதிகாலைகளை நான் பார்த்திருந்தால் அதிசயம்.

பொதுவாக நான் ஒரு ராத்திரிப் பறவை. ஊர் அடங்கியபிறகுதான் எனக்கு எழுத வரும். அதன்பிறகு சில மணி நேரம் எழுதி முடித்துவிட்டுப் படுத்தால் காலை எட்டரைக்கு மேல்தான் விழிப்பு வரும்.

எப்போதாவது அபூர்வமாக, நான் அதிகாலையில் விழித்தெழ நேர்வதுண்டு. அது பெரும்பாலும் விமானம் அல்லது ரயிலைப் பிடிப்பதற்காக இருக்கும்.
இன்று காலை ஒரு வித்தியாசம், ராத்திரி ஒன்றரை மணிக்குப் படுத்தவன், அதிகாலை ஐந்தே முக்கால் மணிவாக்கில் புரட்டிப் போடப்பட்டேன்.
ம்ஹூம், அப்படிச் சொன்னால் சரியாக இருக்காது. கீழே சரிக்கப்பட்டேன் என்பதுதான் ஓரளவு பொருத்தமான வார்த்தை.

என்னைச் சரித்துக் கீழே தள்ளியவர்கள், என் மனைவியும், மகளும். இன்னும் முழுசாக விடியாத அதிகாலையில் எனக்கு எதிராக இப்படி ஒரு சதி!
என்ன ஆச்சு?

நாளைக்கு நங்கையின் ஐந்தாவது பிறந்த நாள். நான்கு வருடங்களுக்கு முன்னால் ஒரு நள்ளிரவு நேரம், படுக்கையில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தவள் அப்படியே உருண்டு புரண்டு விளிம்புக்கு வந்து, கீழே விழுந்துவிட்டாள்.

நல்லவேளை, பெரிதாக எந்தக் காயமும் இல்லை. பத்து பதினைந்து நிமிடம்வரை வாய் மூடாமல் அழுதவள், அப்புறம் அசந்து தூங்கிவிட்டாள். காலையில் எழுந்து பார்க்கும்போது எந்தப் பிரச்னையும் தெரியவில்லை.

ஆனால், எங்களுக்குப் பயம். குழந்தை இப்படிக் கட்டிலில் இருந்து விழாதபடி பார்த்துக்கொள்வது எப்படி என்று குழம்பினோம். பேசாமல் கட்டிலைத் தூக்கி எறிந்துவிட்டுக் கீழே மெத்தையைப் போட்டுவிட்டால் என்ன என்றுகூட யோசித்தோம்.

கட்டிலின் நான்கு பக்கங்களில் இரண்டைச் சுவர்கள் அடைத்துவிடுகின்றன. மூன்றாவது பக்கத்தில் நாங்கள் படுத்திருப்பதால் குழந்தை எங்களைத் தாண்டிச் சென்று கீழே விழமுடியாது. அந்த நான்காவது பக்கம்தான் பிரச்னை.

அந்த நேரத்தில் எனக்கு ஓர் அபாரமான(?) யோசனை தோன்றியது. பேசாமல் ஒரு ப்ளைவுட் வாங்கிக் கட்டிலின் அந்த நான்காவது பக்கத்தை அடைத்துவிட்டால் என்ன?

அப்போது எங்கள் வீட்டில் மர வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அந்தத் தொழிலாளர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, மறுநாள் மாலையே கட்டிலின் நான்காவது பக்கம் மூடப்பட்டுவிட்டது.

இப்போது கட்டில் மூன்று பக்கம் மூடப்பட்டு அலுவலக ‘கேபின்’போல ஜோராக இருந்தது. குழந்தை புரண்டு விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

கொஞ்ச நாள் கழித்து, அடுத்த பிரச்னை ஆரம்பித்தது.

இப்போது நங்கை நிற்கவும், கொஞ்சம் தம் பிடித்து நாற்காலி, சோஃபா போன்றவற்றின்மீது ஏறவும் கற்றுக்கொண்டிருந்தாள். அதே உற்சாகத்துடன், கட்டில் முனையில் அடித்து நிறுத்தப்பட்டிருந்த அந்த ப்ளைவுட் பலகையையும் அவள் அணுகினாள்.

இதனால், தினந்தோறும் நாங்கள் அவளைத் தூங்கவைக்க முயற்சி செய்யும்போது அவள் பிடிவாதமாக மறுத்தாள். தூங்குவதற்குப் பதில் அந்த ப்ளைவுட் எவரெஸ்ட்மீது ஏறவே விரும்பினாள். பகல் நேரங்களிலும் இந்த முயற்சி தொடர்ந்தது.

பலகை நுனி அவள் கால்களைக் கிழித்துவிடுமோ என்று நாங்கள் பயந்தோம். அதைவிட மோசம், அவள் ஒருவேளை பலகைமேல் ஏறிவிட்டால், கண்டிப்பாக மறுபக்கம் விழுந்துவிடுவாள். அதற்கு என்ன செய்வது? ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போய் நாங்கள் இன்னொரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொண்டுவிட்டோம்.

நல்ல வேளையாக, சில வாரங்களில், நங்கையின் மலையேற்ற ஆர்வம் குறைந்துவிட்டது. நாங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

எந்த அலங்காரமோ, வண்ணப் பூச்சுகளோ இல்லாத அந்தச் சாதாரண ப்ளைவுட் பலகை, நங்கைக்குப்பின் அவளுடைய தங்கைக்கும் பயன்பட்டது. எங்களுக்கும் அவ்வப்போது சட்டை, துண்டு, பெல்ட், ஹேங்கர் போன்றவற்றைப் போட்டுவைக்க உதவியது.

ஆனால், நாங்கள் கவனிக்காத விஷயம், எங்களையும் அறியாமல் நாங்கள் அந்த ப்ளைவுட் பலகையை நாள்முழுக்க அசைத்துக்கொண்டே இருந்திருக்கிறோம். இதனால், அதனுடன் ஆணி மூலம் பிணைக்கப்பட்டிருந்த கட்டில் கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்திருக்கின்றன.

இன்று காலை, நானும் குழந்தைகளும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தோம். வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த என் மனைவிக்கு, குழந்தை அழுகிற சத்தம் கேட்டிருக்கிறது. அவசரமாக உள்ளே ஓடி வந்திருக்கிறார்.

என்னைத் தாண்டிச் சென்று குழந்தையை எடுப்பது என்றால், நேரம் ஆகும். ஆகவே, கட்டிலின் நான்காவது முனையில் இருந்தபடி ப்ளைவுட்டுக்குமேல் எக்கிக் குழந்தையைத் தூக்க முயன்றிருக்கிறார்.

அவ்வளவுதான். நாலு வருட உலுக்கலின் Breaking Point – ப்ளைவுட் கட்டில் காலோடு சேர்ந்து பிளந்துகொண்டு வந்துவிட்டது. அந்தப் பக்கம் அவர் விழ, இந்தப் பக்கம் குழந்தைகளும் நானும் சரிய, செம கலாட்டா.

நான் எதுவும் புரியாமல் கண் விழித்துப் பார்த்தேன். மேல் கூரையில் ஒட்டப்பட்டிருக்கும் ரேடியம் நட்சத்திரங்களுக்குப் பதில் ஜன்னல்தான் நேரடியாகக் கண்ணில் பட்டது. ’என்னடா விநோதம் இது’ என்று எழுந்து உட்கார்ந்தால், நான் கிட்டத்தட்டத் தரையில் கிடந்தேன்.

ஒரே நிம்மதி. யாருக்கும் அடிபடவில்லை. அந்த ப்ளைவுட் பலகையைப் பத்திரமாகக் கழற்றி பால்கனியில் போட்டோம். அதன் நான்கு வருடக் கடமைகள் முடிவுக்கு வந்தன.

வரும் வாரக் கடைசியில், உழைப்பாளர் தின உபயத்தில் Long Weekend வருகிறது. அப்போதுதான் புதுக் கட்டில் வாங்கவேண்டும்.

இந்தமுறை, கட்டிலுக்குக் கீழேயே ரகசிய ஷெல்ஃப் வைத்து என்னுடைய புத்தகங்களைப் பதுக்கும்படியான வகையில் வாங்க உத்தேசம். ஏதேனும் Brand / Shop சிபாரிசு உண்டென்றால் சொல்லுங்கள்.

என்னுடைய ஒரே குழப்பம், உடையாத, பிளவுபடாத, இன்னும் முழு வலுவோடு இருக்கிற அந்த ப்ளைவுட் பலகையை என்ன செய்வது? அதன் கடமை முடிந்துவிட்டது என்று தூக்கி எறிந்துவிடலாமா? அல்லது, கி.ரா.வின் ‘கதவு’ சிறுகதையில் வருவதுபோல் மலரும் நினைவுகளாகப் பத்திரமாக வைத்திருக்கலாமா?

எழுதியவர் : என். சொக்கன் on: April 28, 2009 (3-Sep-15, 7:44 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : udaintha kattil
பார்வை : 255

மேலே