இவ்வுலகம் மிகப் பெரிது

எனக்குத் துயர்வந்த பொழுது
உனது தேவதை ஒருவரை
அனுப்பி ஆறுதல் அளித்தாய்; 1
எனது துன்பத்தைச் சொல்ல
நீஉன் காதுகள் இரண்டையும்
காட்டி எனக்குச் செவிமடுத்தாய்; 2
எனக்குக் குளிரெடுத்த பொழுது
உன்னிரு கரங்களால் என்னைநீ
அன்பால் அணைத்துக் கொண்டாய்; 3
நானிருளில் வழிதவறி யபொழுது
ஒளிதந்து, என்னைநீ வழிநடத்தி
வளமான வாழ்வு தந்தாய்; 4
நீஎன் கைகளைப் பிடித்துக்கொள்,
நான்எதற்கும் அஞ்ச மாட்டேன்!
எப்பொழுதும் என்னை விடமாட்டாய், 5
இவ்வுலகம் மிகவும் பெரிது,
எனவே,நீ தீர்மானித் தவழியில்
செல்ல நானும் முயற்சிப்பேன்; 6
அவ்வழி மலைமுகட்டிற் கென்றாலும்
நன்மையே நடக்கும் என்பதை
நானும் நன்றாய் அறிவேன்; 7
"கீழே நான்தவறி வீழ்ந்தாலும்
என்னை நீஉன் கரங்களில்
மென்மையாய்த் தாங்கிக் கொள்வாய்" 8
(அல்லது)
"கீழே விழாமல் பறப்பதற்கு
கற்றுத் தருவாய்" எனநான்
நன்றாய் அறிவேன், என்இறைவா! 9