பேணத் துணிவில்லை பெருமைப் பேழைதனை
கருவது ஆவதும் உருவது காண்பதும்
கற்பனை தாண்டிய உண்மையன்றோ.
பருத்தவெண் மேகமும் கருத்ததன் காரணம்
ஆழ்கடல் மாரினை ஈன்றதன்றோ.
தெருவினில் ஓடியே வரும்சிறு ஓடையைத்
தேக்கியே உயர்த்திய தோட்டமன்றோ.
பெரும்பெரும் பச்சைகள் உருச்சிதைந் தாக்குதல்
பேய்களு ருட்டிய சட்டமன்றோ.
வரும்படி மேடையில் நிரந்தரப் போர்க்களம்
வாழ்வெனும் பேரிலே ஆடலன்றோ.
விரும்பிடா வீதியில் விரல்பதிக் காமலே
விருட்டென ஓடுது காலமன்றோ.
அரும்புகள் பூத்திடப் பொறுமையும் இல்லையே
அறுத்ததில் மணம்பெறும் கூட்டமன்றோ.
நரம்புபு டைத்ததில் தினங்களு திர்ந்ததும்
நரைபல பூத்ததும் மிச்சமன்றொ.