அதெல்லாம் ஒரு காலம்

விலை உயர்ந்த பேஸ்ட் டையெல்லாம்
பற்களில் வைத்து
தடவி பார்த்து,உரசி பார்த்து
தேய்த்து பார்த்து..
சில நேரம் கடுப்பாகி
மோதி பார்த்தும்..

கடவாய் பற்கள் மட்டும்
விடுவேனா உன்னை என்றபடி
அன்றாடம் ஏதேனும்
அவஸ்தையை கொடுக்கும்.

இவ்வாறான நேரங்களில் தான்

எம்பது வயதான ஏகாம்பரம் தாத்தா
கட்டம் போட்ட கால் சட்டையை
தோள்மாட்டில் தொங்கப்போட்டு,
வேப்பம்குச்சியை வாய்க்குள் விட்டு
கடாசிய படி
அந்த அதிகாலையில்
வாசலில் வந்து நின்று
'வாடா பேராண்டி ..வயக்காட்டுப்பக்கம் போயிட்டு வருவோம் ''என்பதும்,

கலுக்காணி கோயில்
கடா விருந்தில்
முத்திய எலும்பை
கடா வாய்க்குள் சொருகி
'மவனே யார்கிட்டே 'என்பது போல்
அதனை அரைத்து தள்ளி
உள்ளே இறக்குவதும்
கண்முன் தோன்றி..

அவர் மேல்
ஒரு வித பொறாமையையும்,
ஏக்கத்தையும் உண்டாக்கும் எனக்குள்.

______________________________________
படைத்தது:செந்தில் குமாரன்
பகிர்வது:யாம்.

எழுதியவர் : # படித்ததில் பிடித்தது # (7-Sep-15, 11:41 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : athellam oru kaalam
பார்வை : 75

மேலே