சோமுவின் கவிதைப்பெண்
கவிதை எனுமோர் பெண்தெய்வம்-அவள்
கவிஞர் பரவும் அருந்தெய்வம்
புவியை இயககும் புகழ்த்தெய்வம் அவன்
புலவர் தமக்குக் குலதெய்வம்
கையில் வளைகள் ஆடிடுமே -அவள்
காலிற் சிலம்பு பாடிடுமே
மெய்யில் மின்னல் வீசிடுமே -அந்த
மேனி கவிதை பேசிடுமே
மண்ணை மிதித்துச் செல்கையிலே பூமி
மங்கை உள்ளம் மகிழ்ந்துடுமாம்
விண்ணைக் கிழித்துச் சாடையிலோ-வானம்
விம்மி நிமிர்ந்து விரிந்திடுமாம்
பூவில் நின்று சிரித்திடுவாள் -அவள்
பூங்கொடி தன்னில் ஆடிடுவாள்
காவில் வீசும் காற்றினிலே -இன்பக்
கண்ணிகள் பாடி உலவிடுவாள்
தாமரைப் பூவில் வீற்றிருப்பாள்-வானத்
தாரகை தன்னுள் மினுமினுப்பாள்
சாமமை யிருளிற்காட்டினிலே -ஒரு
சம்பகப் பூவிற் கமழ்ந்திடுவாள்
நீல மயிலின் தோகையிலே எழில்
நெய்திடு பட்டுப் பூச்சியிலே
மாலையின் செவ்விய வானகத்தே -நின்று
மந்திரிப் பாளவள் அந்தரத்தே
ஆடிடும் வான்கடல் அலைகளிலே -எழுந்(து )
ஆர்த்திடு வாள்புயற் காற்றினிலே
ஓடிடு வாள்நதி ஓட்டத்திலே அவள்
உதித்திடு வாளகதிர் வட்டத்திலே
கவிதை எனுமோர் பெண்தெய்வம் -அவள்
கவிஞர்க் கெல்லாம் குலதெய்வம்
புவியை இயககும் புகழ்த் தெய்வம் -அவள்
புலவர்க் கெல்லாம் குலதெய்வம்.
av
pallaa