முனைவர் அப்துல் கலாம்
முனைவர் அப்துல் கலாம்
பிறப்பால் முஸ்லிம்
வளர்ப்பால் இந்து .....
உன் பிறப்பு மட்டுமல்ல
இறப்பும் தேசிய மத
ஒருமைப்பாட்டை
வலியுறுத்திச்சென்று விட்டது ......
பூமியில் படைத்த சாதனை
போதும் என்று- அந்த
சாமியிடம் சென்றாயோ?
இல்லை
மத வேறுபாட்டை
வேரறுக்க அந்த
விண்ணுலகம் நாடிச்
சென்றாயோ?
2020 வரை இருந்தால்
உழைக்கும் வர்க்கம்
உறங்கியே கிடக்கும் என்று
உறங்கியவர்களை எழுப்பி விட்டு
ஓய்வெடுக்கச்சென்றாயோ ?
நொண்டிக்கொண்டிருந்த
சமுதாயத்தை
ஊன்று கோலாய்த்
தாங்கி நிறுத்திய
மேதையே !
சோர்ந்து கிடந்த
இளைஞர்களைத்
தட்டி எழுப்பிய
சிங்கமே !
இருண்டு கிடந்த எங்கள்
இதய வானில்
ஒளி தந்த
விடி வெள்ளியே !
பயமுறுத்திய உலக
நாடுகளுக்கு
பயம் காட்டிய
அக்னியே !
கல்வியோடு அரசியல்,
விஞ்ஞான அறிவையும்
இளையோர்க்குப்
புகட்டிய
இளைஞனே !
பொக்ரான் ராஜாவே !
உனை இனி எங்கு
காண்போம் ?
ஒளி விளக்காய் வந்து
எதிர் கால நம்பிக்கைக்கு
வெளிச்சப்பாதை தந்த
ராமேஸ்வரத்தின்
பொக்கிஷமே !
உன் வாழ்க்கை
முடிவதற்கு அல்ல......
ஆயிரம் ஆயிரம்
இளைஞர்களின்
கனவின் அஸ்திவாரமே
உன் வாழ்க்கை தான் .....
உன் அன்பும் ,எளிமையும்,
அறிவியல் அறிவும் ,
தூண்டுதலும், தலைமையும்,
வழி நடத்துதலும்
ஏதாவது ஒன்று
ஒவ்வொரு இந்தியனிடமும்
இருந்திருந்தாலும்
எப்போதோ
வல்லரசு ஆகியிருப்போமே
தலைவா !
உன் துணை கொண்டு
உறுதி எடுத்தோம் ......
உன் வழியில் உழைத்து
நம் தாய் நாட்டை
முன்னேற்றுவோம் .....
மரணமில்லை உனக்கு
வல்லரசு இந்தியாவில்
என்றும்
மார்க்கண்டேயன் நீ தான்....
எங்கள் சிந்தனைச்சிறகுகளைத்
துடிப்பாக்கிப்
பறக்க விடுகிறோம்
உயர்வுப்பாதையில் .....
உன் பாதச்சுவடுகளையும்
மீதச்சுவடுகளையும்
பத்திரமாய்ப்
பாதுகாக்கிறோம்.....
எண்ணங்களாகவும்
எழுத்துக்களாகவும்
என்றும்
எங்கள் மனதில்
சிம்மாசனம் இட்டு
வீற்றிருப்பாய் .....
இனி வரும்
காலங்களின்
இந்திய வெற்றிகளை
உன் காலடியில் சமர்ப்பிக்கின்றோம்....
எதிர்கால
இந்திய இளைஞனின்
இதயத்துடிப்பாய்
நீ
என்றும்
எங்களுடன் .......
ரா. காயத்ரி