அம்மா என்னும் ஒளியின் வெளி
விசிறி மட்டையின் அடிக்காம்பு கொண்டு
என் கணுக்காலில் அடிக்கும்போது
அப்பா ஆனவளே !
உன் ஆட்காட்டி விரலால்
என் தலைகோதி
பழங்கதையுரைத்து
உறக்கமென்னும்
உள்வீட்டுக்குள்
என்னை அழைத்துச் செல்கையில்
என் பாட்டியானவளே!
பால்யவயது பிள்ளைகளின்
அழுக்கு வந்து- என்
காலடியை அண்டும்போது
அறிவுரையால் எனைவெளுத்து
ஆசான் ஆனவளே!
உடைந்த உள்ளத்தின்
சில்லுகள் என்னைச் சுற்றித்திரிகையில்
தோழன் ஆனவளே!
நினைவுகளின் மலர்க்கடலில்
தேன்சொட்டாய் இனிப்பவளே
தேமதுர உரையழகால்
பிள்ளைகளின் அகவரங்கை
பிழிந்து நிதம் நிறைப்பவளே
நிலவுக்கும் மனசுக்கும்
பாலம் போட்டவளே!
பாலத்தின் வழியே
பசியூருக்கு கூழ்வண்டி ஓட்டியவளே!
சத்துள்ள பாலமுதூட்டி
சத்தெல்லாம் இழந்தவளே
சுத்தமுள்ள மனக்கிடங்கில்
சூரியப்பிழம்பாய் தகிப்பவளே!
விதையின் கருவறையே
வீரிய அன்பின் சிறையறையே!
வயிரென்னும் வயிரக்கிடங்கில்
வம்சத்தை வளர்த்தவளே
உயிரை இம்சித்து
உயிர்ப் பயிர்க்கு நீரூற்றி
உளமார குளிர்ந்தவளே
பிள்ளையின் பிதற்றல் கேட்டு
நெக்குருகி நிற்பவளே
பிள்ளை பிசாசென்றாலும்
பீற்றலில் குறையாதவளே
அமுதவூற்றுத்திரளே!
உயிர்ச்செல்கள் ஒவ்வொன்றும்
சொல்லும் பெயர் அம்மா!
உலகவனத்துக்கு
வயிறு வழியே கயிறுகட்டி
இறக்கிவிட்டவள் அம்மா!
அம்மா என்பவள்
இல்லை ஒலிக்குறியீடு
அவள் உயிர்க்குறியீடு
அம்மா என்பவள் அகக்கடவுள்
அவள் பெருஒளியின் வெளி.
கடவுளை எவரும் கண்டதில்லை
கடவுள் உண்டென நம்புகிறீர்போன்ம்
அம்மா என்பவள் சிலையில்லை
அவள் ஆன்மா வளர்க்கும் விளைநிலம்
நிலமெனில் மனிதா அது மலடல்ல
நிலமே விதையின் உயிர் வீடு
அவள் அன்பால் வழியும் உயர்வீடு
ஒளியை வணங்கு உயிர்பெருவாய்!