பசியின் நீதி

வீரியமற்ற பகல்
தன்னை விழுங்கத்தந்து
கொண்டிருந்தது இரவிடம்..
எந்த எதிர்ப்பும் இன்றி படிந்த பகலை..
இரசித்து உண்டது இராப்பொழுது.!
அதையே வெறித்துக்கொண்டிருந்த..
தோட்டத்து உயிர்களுக்கு..
பசி அதன் மாயப்போர்வைகொண்டு
வயிற்றை மூடத்துவங்கியது.!
வயிற்றின் பின்சுவர் முதுகின் முன்சுவரோடு..
இரகசியங்கள் பேச அது..
பசிக்காக வெளியே வந்து பலியான எலிபற்றியும்..
ஊதிய வயிறோடு ஊரமுடியாத பாம்பைப்பற்றியதாகவும் இருந்தது.!
வீட்டினுள்
வயிறு நிறைய பசியை உண்டதில்..
பெருத்த ஏப்பம் ஒன்று
அடுக்களைச்சுவர் மோதி கீழே விழ..
அங்கிருந்த பூனை ஒன்று
மெதுவாக சாம்பல் சிலிப்பி..
எழுந்துபோனது அடுத்தநாள் வருவதாக அடுப்பிடம் சொல்லி.!
பூனை வந்ததோ இல்லையோ
விருந்துக்கு வரும் மரணத்திற்கு..
இலையில் இரையானது பசித்த உயிரொன்று..
இல்லை இரண்டு இல்லை மூன்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!
மீண்டும் கிழக்கே தீமூட்டி
இரவை பலிகொண்டு
பசியாறி வந்ததொரு பகல்பொழுது.!

எழுதியவர் : நிலாகண்ணன் (12-Sep-15, 11:24 am)
Tanglish : pasiyin neethi
பார்வை : 734

மேலே