உள்ளுறை வெப்பம்

மௌனத்தால்
கைது செய்யப் பட்டிருக்கிறது
வாழ்வு.

புழுதி படிந்து
சுமை நிறைந்த வார்த்தைகள்
சலித்துப் போன நாட்காட்டியில்
உள்ளுறை வெப்பமாய்
கொதித்துக் கொண்டிருக்கிறது.

உறுதி செய்யப்படாத
என் அடையாளம்
யாரோ ஒருவரின் உடுப்போடு
முகவரியற்ற தெருவில்
அலைந்து கொண்டிருக்கிறது.

வாழ்ந்ததற்கான அடையாளம்
நினைவில் இல்லாத
காலத்தைப் போலவே
கனவு வார்த்தைகளில் எழுதப்பட்ட
ஒரு கதையைப் போலவே
தொலைந்து போய் இருக்க்கிறது.

எனது மெழுகுவர்த்திகள்
உருகி வெற்றிடமாகிறது
நிலவிற்கு இடம்தரும்
பெருந்தன்மையோடு.

எனக்கு
ஒரு விவசாயியின்
நம்பிக்கை வேண்டும்...

இந்தப் பருவத்திலேனும்
விளைந்துவிடும்
என்ற நம்பிக்கையோடு

என்னை மீட்டெடுக்க.

எழுதியவர் : rameshalam (12-Sep-15, 12:26 pm)
பார்வை : 71

மேலே