அம்மா இருக்காங்களா
”அம்மா இருக்காங்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் அந்த அம்மாள்.
வாசற்புறம் போய் ‘என்ன?’ என்பது போலப் பார்த்தேன்.
“பொண்ணு கல்யாணத்துக்கு தாலி வாங்கணும்....” என்று ஆரம்பித்தார்.
குளித்து சுத்தமாக இருந்தார். தலையில் பூ வைத்திருந்தார். அழுக்கில்லாத சேலை ரவிக்கை உடுத்தியிருந்தார். ஒன்றிரண்டு நகைகள் கூடப் போட்டிருந்தார். ஆகவே ”ஐ ஆம் சாரி. அடுத்த வீடு பாருங்க” என்று சொல்ல நினைத்தாலும் வாயில் வார்த்தை வரவில்லை.
“வீட்ல பொம்பளைங்க யாரும் இல்லைம்மா. அவங்க யாராவது இருக்கிறப்போ வாங்க” என்று மட்டும் சொன்னேன்.
அந்த ஜெண்ட்டில் ரெஃப்யூசலில் அவர் தளர்ந்து விடவில்லை.
“பத்து வீட்ல மடிப்பிச்சை எடுத்து தாலி பண்றதா வேண்டிகிட்டோம். இது ஒரு சாங்கியம், வேண்டுதல். அவ்வளவுதான்” என்று சொல்லி கொஞ்சம் சங்கடமாகச் சிரித்தார்.
சில வினாடிகள் யோசித்தேன். அப்படி ஒரு வழக்கம் உண்டு என்பது தெரியும். நாகப்பட்டினத்தில் என் ஹௌஸ் ஓனரே இப்படிச் செய்ததுண்டு. வீடு வீட்டுக்குப் போய் நிற்பார். இப்படி டயலாக்கெல்லாம் பேசுவதில்லை. எங்கள் தெருவில் மாத்திரம்தான் யாசிப்பார். டிரெடிஷனல் பிச்சைக்காரன் போல பஸ் ஸ்டாண்டு ரயில்வே ஸ்டேஷன் என்று போவதில்லை.
“உங்க வீடு எங்கேம்மா?”
“பம்மல்ங்க”
“பம்மல்ல உங்க தெருவில பத்து வீடு இல்லையா?”
“வேண்டுதல் பத்து வீடுன்னா பத்தே வீடு இல்லைங்க”
“பின்னே? நூறா?”
“நீங்க என்னை நம்பல்லைன்னு நினைக்கறேன்”
“அப்படியெல்லாமில்லை. நல்லா நம்பறேன். கொஞ்சம் இருங்க” உள்ளே போய் சில்லறை டப்பாவிலிருந்து ஒரு ரூபாய் நாணயம் கொண்டு வந்து அந்த அம்மாள் நீட்டிய முந்தானையில் போட்டேன்.
“என்னாங்க இது?” என்றார். அவர் முகம் அடிபட்ட பூனை போல சிறுத்தது.
“உங்க சாங்கியத்துல ஒரு பார்ட் ஓவர். ஒரு வீட்ல பிச்சை வாங்கியாச்சு. திருப்தியா?”
“அதில்லைங்க. அதுக்காக ஒரு ரூபா போடறது நல்லா இல்லைங்க”
“ஏங்க, சாங்கியத்துக்காக பிச்சை எடுக்கறேன்னு சொன்னீங்க. அது ஒரு ரூபாயா இருந்தா என்ன ஓராயிரமா இருந்தா என்ன? ஒரு ரூபாய்ன்னா நிஜப் பிச்சைக்காரி எஃபெக்ட் வரும். சாங்கியம் சிறப்பா நிறைவேறும்”
அந்த அம்மாள் எதுவும் பேசாமல் போய்விட்டார். இந்தியன் தாத்தா மனைவியிடம் கேட்பது போல ‘நா செஞ்சத் தப்பா? நா செஞ்சத் தப்பா?’ என்று இல்லத்தரசியை சுற்றிச் சுற்றி வந்து கேட்டேன்.
சுகன்யா மாதிரி கண்ணீர் மல்க “இல்லைங்க” என்று கையைப் பிடிக்கவில்லை.
“கர்மம், கர்மம். உங்க சாமர்த்தியத்தை பிச்சைக்காரங்க கிட்டதான் காட்டணுமா?” என்று தலையில் மொத்திக் கொண்டார்.