அலைபேசி கோபுரமே

அலைபேசி கோபுரமே...!!

கலியுகத்தில்
நவீன யுக்திகளின் நாயகன் நீ
ஊழல்கள் உள்ளடக்கி உயர்ந்திருக்கிறாய்
இரண்டாம் ஜி..மூன்றாம் ஜி.. நான்காம் ஜி...
மரியாதைகளுடன் படிப்படியாக..!!

வணிகத்தை வளர்க்கிறாய்
வம்பிற்கும் துணை நிற்கிறாய்..!!

அலைபேசியின் அணைப்பினில்
ஏகாந்த கதைகள்
பேசும் அனைவருக்கும்
உன் காந்த அலை முத்தங்கள்..!!

நீ முத்தமிடுகையில்
உடலில் டி என் ஏக்களை
காவு கொள்கிறாயாமே...!!

மலட்டுத் தன்மை உன்னால்தான்
உணராதவர்கள்
குழந்தை வரம் வேண்டி
கோவில் சுற்றுகிறார்கள்
ரேடியோ அலைகளை
அலைபேசி மூலம்
அரவணைத்துக் கொண்டு...!!

தோல் நோயும் , வலிப்பு நோயும்
உன்னால்தான்
எவரும் அறிந்திடா தீவிரவாதி நீ
நீ அழித்துக் கொண்டிருப்பது
சிட்டுக் குருவியை மட்டுமில்லை
எங்களையும் சேர்த்தேதான்...!!.

கதிர்வீச்சு கரம்நீட்டி
நோய்களை விதைக்கிறாய்
புற்று நோயும் மூளைக்கட்டியும்
உன் விதை தூவல்
நோயை விதைக்கிறாய்
உன் அறுவடையோ மனித உயிர்களாய்...!!

வானளாவ வளர்ந்த பணம் காய்ச்சி மரம் நீ
உலுக்கிக் கொள்கிறார்கள்
அலைபேசி நிறுவனங்கள் உன்னிடத்தில்...!!

நோய்த் துறட்டுக் கோலால்
நீ உலுக்கிக் கொள்வதெல்லாம்
அப்பாவி மனித உயிர்களைத்தானே....!!

மரண பிணிகளின் உற்பத்தியாளன் நீ.
உன் அருகாமை
கூற்றுவனுக்கு விடும் அழைப்பு...!!

நானூறு மீட்டருக்கு அப்பால் நின்றுவிடு
இல்லையேல்
அலைபேசி கோபுரமே...
எங்களை அழித்துக் கொண்டிருக்கும்
உன்னையும் ஓர்நாள்
நாங்கள் அழிக்க வேண்டி வரும்... !!

(குறிப்பு : கடந்த மாதம் "இலக்கியச் சோலை" நடத்திய கவி அரங்கில் வாசித்த கவிதை)

எழுதியவர் : சொ.சாந்தி (16-Sep-15, 9:17 pm)
Tanglish : alaipesi kopurame
பார்வை : 103

மேலே