வார்த்தை பிழை
மழை என்றால்
மனைவிக்கு பயங்கர அலர்சி.
நானொரு கவிஞன் என்பதால்
கட்டாயமாக
நான் மழையை ரசித்து தானே
ஆக வேண்டும்..?
ஒரு நாள் மிக வருத்தமாக
[மென்மையாக..அப்போ தான் உண்மையான பதில் கிடைக்கும்]
''உனக்கு ஏன் மழையை பிடிக்கல ?''என்றேன்.
''ஒரு மழை நாளில் தான்
நமது திருமணம் நடந்தது'' என்று
அதிர்ச்சி யூட்டினாள்.
அடுத்து,
எனது கேள்வியை
ஒரு இடியைப்போல இறக்கினேன்.
''அப்போ..என்னை உனக்கு பிடிக்கல ?''என்று.
அவசரமாய் என் வாயை அவள் பொத்தியப்போது
மின்னலொன்று வெட்டிச் சென்றது.
குளித்து வந்த கூந்தலை
உலர தட்டியபடி,
''அட ..அதில்லைங்க..
மழையை காரணம் காட்டி
நிறைய பேர் கல்யாணத்துக்கு வரல..
மொய் குறைந்து
அப்பாவின் கடன் தீரல.'' என்றாள்.
இது,
வாழ்க்கை பிழை அல்ல
வார்த்தை பிழை.
முறையாய் ,
இவள் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும்.
''நமது திருமண நாளில் தான்
இந்த மழை வந்தது.''.