திரைகளின் பின்

உன் பரிணாம‌ம்
பற்றிய
புனைவுகளில்தான்
நான் பூக்கள்
விதைக்கிறேன்!!

கன்னத்தின்
மீதான உன்
முதல் முத்தம்!
என் இரண்டாம்
பிறப்பின்
எழுதா இன்பம்!!

ஒவ்வோர்
விரலையும்
வருடுகையில்
தூக்கத்திலும்
உதடு சுழிப்பாய்
என் உயிர் கசியும்!!!

இரண்டோ மூன்றோ
ஆண்டின் இறப்புக்கு
பின்னர்!!
உன் உதட்டில்
என் பெயர் ஒலிக்க‌
நானும் குழந்தையாவேன்....

என் வாய்வரை
சோற்றோடு உன்
கை நீட்டி
படெக்கென்று
நீயருந்தி
கண்சிமிட்ட!!
பொறாமையில்
முகிலை அள்ளி
போர்த்திக்கொள்ளும்
நிலவு!!!

வியாபார
கணக்கேடுகளில்
உன்
கோட்டோவியங்கள்
என் கோபத்தையும்
மறைக்கும்!!

கொஞ்சி கெஞ்சி
அடம்பிடித்த‌
உனை
தனியே பள்ளியில்
இறக்கிவிடும்
தருணத்தில்!!
மனதெங்கும்
தீமழை மிஞ்சும்..

நீண்ட
வருடங்களின் பின்
நீ வளர்ந்து
மலர்வாய்!!
பழக்கமிருப்பின்
மலர்ந்த மகிழ்வில்
மதுக்கிண்ணம்
வெறுப்பேன்!!

உனதான
அறையில்
நான் நுழையும்
போதெல்லாம்
நீ பெண் எனும்
அசரீரி
பிடறியில் தட்டி
கதவு தட்டவைக்கும்!!

எனக்கு நீ
என்றும் குழந்தை!
உனக்கு நான்
ஓர் வயதின்
பின் ஆண்...

என் விந்தின்
விருட்சமே!
ஜீவித காற்றே
ஜீவினின் ஊற்றே!

என் நினைவிலும் சரி
எதிர்கால நிகழ்விலும் சரி
நீ குழந்தையாகவே
இருந்திருக்கலாம்...

உன் பரிணாம‌ம்
பற்றிய புனைவுகளில்
நான் பூக்கள்
விதைக்கிறேன்!
நினைவகங்களில்
முட்களும்
முளைக்கின்றன!!

நீ குழந்தையாகவே
இருந்திடும் வரம்
எந்த இறைவன்
கொடுப்பான் எனக்கு....

எழுதியவர் : புலவூரான் ரிஷி (20-Sep-15, 9:59 pm)
Tanglish : thiraigalin pin
பார்வை : 126

மேலே