காலடிக் காவியம்
கரும்பலகையில் எழுத்துக்களை
நீ கவனித்து கொண்டிருக்கும்போது
உன் கருவிழி பலகையில்
காவியம் படித்துக் கொண்டிருந்தேன் நான்
எலக்ட்ரான் நியூட்ரான் என்று
நீ ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கும்போது
நீதான் என் உயிர் அணுக்கள் என
ஓராயிரம் கவிதைகள் எழுதி முடித்தேன்
இறுதியாண்டில் தேர்ச்சி பெற்று
எங்கேயோ போய் விட்டாய் நீ
பூஜ்யங்கள் வாங்கி வீழ்ச்சியுற்று
உதவாக்கரை பட்டம் வாங்கிவிட்டேன் நான்
எழுதிய கவிதைகளையெல்லாம்
வெற்று காகிதங்கள் என கிண்டல் செய்து
எடைக்கு போட்டுவிட்டார் என் அப்பா
சுண்டல் மடிப்பதற்காவது பயன்படட்டும் என்று
சுண்டலை சுவைத்துவிட்டு
வீசியெறியப்பட்ட என் கவிதைகளெல்லாம்
இப்போது கடற்கரை மணலெங்கும்
கதறி கண்ணீர் வடிக்கின்றன
நீ எப்போதாவது இக் கடற்கரை வரக்கூடும்
அப்போது ஒரு கவிதையாவது
உன் காலடிபட்டு காவியமாகும்போது
வெற்று காகிதங்கள் என்று இதை
எவர் சொல்லக் கூடும்

