நீ இன்னும் மனிதன்தானா - கற்குவேல் பா

மனிதா பதில் சொல் !
நீ இன்னும் மனிதன்தானா ?

பிறப்பதற்கு முன்னமே
அறுத்து எடுக்க
தேதிகள் குறித்தாய் !

பிறந்தது பெண்னெனில்
கள்ளிப்பால் கறந்து
உயிரினைப் பறித்தாய் !

பொய்கள் பேசியே
நித்தம் நித்தம்
உடலது வளர்த்தாய் !

போலி முகங்கள்
கொண்டே - உலகில்
அலைந்து திரிந்தாய் !

அழுக்காறு என்பதற்கு
நற்சான்று நீயென
அலுக்காமல் கூறினாய் !

பிறர்மனைவி தொட்டே
பிணம் தின்னும்
கழுகாய் மாறினாய் !

பாலியல் துன்பங்கள்
செய்தே - பதராய்
பழகிப் போனாய் !

திருடித் தின்றவாறே
திசைஎங்கும் - உன்
பெயர் மொழிந்தாய் !

மரங்கள் அழித்தே
காவிக்குள் மறைந்து
மயிர்க்கூச்சம் கொண்டாய் !

ஓ மனிதா !
நில் !

காலன் வந்து - உன்னை
கல்வாரி மலையினில்
சிலுவையில் ஏற்றி ,

ஆயிரம் ஆண்டுகள்
உண்ணாமல் இருந்த
வல்லுருக்களை ஏவிவிட்டு ;

அவை உன் தேகம் கிழித்து
இரத்தம் சுவைக்கும்முன்
உண்மையைச் சொல்லிவிடு !

மனிதன்தானா நீ ?
நீ இன்னும் மனிதன்தானா ?

- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (22-Sep-15, 7:50 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 66

மேலே