புரிய முயற்சியுங்கள் புதியவர்கள் நாங்களில்லை

அவள் தேவி
அவன் தேவன்
அவர் தேவதேவி
பல மனதில்.....

அவள் அழகி
அவன் அழகன்
அது அசிங்கம்
அதே மனதில்.....

அர்த்தநாரீஸ்வரர்
அதிரடி சிகண்டி
கற்றதும் இவரே
போற்றுவோரும் இவரே ....

பிள்ளை வேண்டி
தொல்லை தாங்கி
பெற்றதும் இவரே
தூற்றுவோரும் இவரே....

பெற்றதும் நினைக்கல
கற்றதும் நினைக்கல
சவமென சடுதியில்
சுடு நெருப்பிடுகையில்.....

அன்புத் தந்தை
அழகுத் தாய்
பெற்ற பிள்ளை
பேரழகுக் கிள்ளை.....

பித்து ஹார்மோனால்
சித்தம் தடுமாறி
சக்தி சிவனாக
சிவன் சக்தியாக.....

பெத்த மனமும்
கொத்தும் கழுகும்
சித்த நேரம்
சேர்ந்து விடுது....

மன்மதன் இரதி
மாறித் தோன்ற
வெத்து வேட்டென
வீசி எரியுது.....

தட்டிக் கேட்க
தழுவி அணைக்க
சுற்றவரும் இல்லை
கற்றவரும் இல்லை.....

எத்தனைக் காலமாய்
எம் ஞாலம்
ஏளனம் கொண்டு
எள்ளி நகையாடுகிறது???!!!!.....

ஒதுக்கீடு கொண்டு
ஒதுக்கினால் யாம்
ஒதுங்கும் இடமும்
ஓவென சிரிக்கிறதே!!!!....

உயிருள்ள மனிதமெம்மை’
உம்மினமென அறிந்து
புரிய முயற்சியுங்கள்
புதியவர்கள் நாங்களில்லை!!!!......

எழுதியவர் : க.நஞ்சப்பன் (23-Sep-15, 11:32 pm)
பார்வை : 73

மேலே