உணவுக்கு மரியாதை

பசித்திருப்போர் வாடும் பரிதாபம் கண்டும்
ருசியில்லை என்றுணவை வீசி – நசிக்காதே!
குப்பைக்குள் போகும்உன் கூடாத சாப்பாட்டை
துப்பாதுண் போரும் உளர்.

ஒருவேளை உண்ண உணவற்று வாடும்
ஒருசாரார் வாட உலகில் – ஒருபொழுது
உண்டு களிக்க ஒருலட்சம் வீணாதல்
கண்டு கிடத்தல் கொடிது .

நெல்மணிகாய் நித்தம் உழைத்தவனைச் சேராமல்.
இல்லா தவனுக்கும் சேராமல் , - பொல்லா
திமிர்படைதோர் கொப்பளித்துத் துப்புதற்குத் தூய
அமிர்தா வதுவோ அறம்?

உழைக்காமல் உண்போர் உணவுக்கு வாழ்வில்
பிழைசெய்து நித்தம் பெரிதாய் – இழைக்கும்
அவமானம் இல்லா தொழிக்க முயன்று
புவனத்தில் ஏழ்மை புதை.

பசியென்று வாடும் பரிதாபங் கோடி
புசித்தற்கு ஈயாஉன் வாயின் – ருசிக்காய்
கசியும் உழவன் வியர்வைத் துளியை
இசிகின்ற செய்கை இழுக்கு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Sep-15, 2:56 am)
பார்வை : 365

மேலே