செவ்வாய்க்கு போகிறோம்

உலக கவிஞர்களே!
சீக்கிரம் தயாராகுங்கள்
வற்றாமலிருக்கும் ஒன்றிரண்டு
நதிகளையாவது கவிதையாக்கவேண்டும்

உத்தம ஓவியர்களே!
தூரிகையோடு புறப்படுங்கள்
சுருங்கிவரும் சில வனங்களையாவது
வரைந்து பத்திரப்படுத்த வேண்டும்

இசை ஞானிகளே!
கருவிகளைவிட்டு ஓடிவாருங்கள்
பூமிபந்தின் கடைசி புள்ளினங்களின்
ஓசைகளை ஒலித்தட்டில் பதிக்கவேண்டும்

சூழ்நிலை அறிஞர்களே!
கோப்புகளோடு விரையுங்கள்
மனிதனல்லாத பூமியின் எஞ்சிய
இனங்களை ஆவணமாக்கவேண்டும்

அன்பு தாய்மார்களே !
இறுதியாக பிள்ளைகளுக்கு
நிலாச்சோறு ஊட்டுங்கள் - ஏனெனில்
இப்படி அழகு நிலா செவ்வாயில் இல்லாமல்போகலாம்

பிள்ளைச் செல்வங்களே!
பூமியில் பார்த்தவற்றை மறக்காதீர்கள்
செவ்வாயில் வருங்கால தலைமுறைக்கு
நீங்கள்தான் பூமியைப்பற்றி கதை சொல்லவேண்டும்

முடிவாக .....
அகழ்வாரை தாங்கிய நிலைமகளே!
உன்னுடைய இந்த நிலைக்காக
நாங்கள் மிக........வும் வருந்துகிறோம்

நீ ஒரு முட்டாள்
தவறு உன்மீது தான்
டைனோசரை வாழவைத்து
மனிதவிலங்கை வேரறுத்திருக்கலாம்


இப்போது வெகு தாமதம் இதைப்பற்றி பேச
வேற்று கிரகத்தில் கிரகப்பிரவேசத்திற்கு
தேதி குறித்தாயிற்று .....
கடவுசீட்டுக்காய் காத்திருக்கிறோம்

செவ்வாய் சீரழிந்தால்
என்ன செய்வோம் என்கிறாயா?
அதுதான் புதன்,வியாழன் என இருக்கிறதே
பை பை ...டேக் கேர் ...

பின்குறிப்பு :
நாங்கள் இங்கிருந்து குடிபெயர்ந்தபிறகு
ஏலியன் வந்து பூமியை சீரமைத்துவிட்டால்
நாங்கள் மீண்டும் வந்து

1.அணு உலை அமைப்போம்
2.நதிகளை சுரண்டுவோம்
3.பிளாட் போடுவோம்
4.இத்யாதி இத்யாதி எல்லாம் செய்யோம்

எழுதியவர் : மேரி டயானா (24-Sep-15, 4:08 pm)
Tanglish : sevvaykku pokirom
பார்வை : 103

மேலே