நீலி - ஒரு பக்க கதை-கவிஜி

"ஏதும் பிரச்சினை வராதே......"- படபடப்போடு நீலி கேட்டாள்...

"ஒன்னும் ஆகாதும்மா...... யாருக்கும் ஏதும் தெரியாது.... அப்பாவை மட்டும் கவனிச்சிட்டா போதும்.... நூறு கோடியும் நமக்குத்தான்....."-என்றான் சித்திரகுப்தன்.....

"என்னடா பண்ண போறீங்க... நீங்க எது பண்ணினாலும்.... உன்னோட இருபதாவது வயசுலதான் அந்த பெட்டிய திறக்க முடியும்... டேய்.., டேய்.... வேண்டாம்..... இது தப்பு..... பெட்டிய உடைக்க முயற்சி பண்ணினா பெட்டி எரிஞ்சு சாம்பலாகற மாதிரி செட் பண்ணி வெச்சிருக்கேன்...... சொன்னா கேளு.... அவசரப் படாத....எல்லாமே ஒரு சேப்டிக்குத்தான்...." என்று கத்திக் கொண்டிருந்த அப்பாவை உள்ளே, அறைக்குள் போட்டு மூடினார்கள் அம்மாவும் மகனும்...

"சித்ரா ஏதும் சொதப்பிடாதடா... அந்த மனுஷன் சொல்ற மாதிரி எரிஞ்சு யாருக்கும் பிரயோஜனமில்லாம போய்ட போகுது.... வெயிட் பண்ணுவோமே.." என்று குழப்பத்தோடு புலம்பினாள் நீலி...

"என்ன இன்னும் அஞ்சு வருசத்துக்கா... போம்மா.... நீ பேசாம வேடிக்கை மட்டும் பாரு... என்றபடியே எதிரே இருந்த அறையைத் திறந்தான் சித்ரகுப்தன் ...

உள்ளே இருந்து சித்ரகுப்தனின் 16 வயது சித்ரகுப்தன், 17 வயது சித்ரகுப்தன், 18 வயது சித்ரகுப்தன், 19 வயது சித்ரகுப்தன், 20 வயது சித்ரகுப்தன் என்று வரிசையாக வந்தார்கள்... நீலி கண்கள் சுழல மயங்கிச் சரிந்தாள்...

எல்லா சித்ரா குப்தனுங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்... சிரித்துக் கொண்டார்கள்...கை குலுக்கிக் கொண்டார்கள்...

"ம்ம்ம்... வாங்க பிரதர்ஸ்......." என்று சொல்லி சிரித்த 15 வயது சித்ர குப்தன்... முதலில் போய் அந்த 100 கோடி பணப் பெட்டியைத் திறக்கும் இடத்தில் தன் கை ரேகையைப் பதித்தான்.. அதன் பின் 16 வயது சித்ர குப்தன், அதன் பின் 17 வயது சித்ர குப்தன், அதன் பின் 18 வயது சித்ர குப்தன், அதன் பின் 19 வயது சித்ர குப்தன், அதன் பின் 20 வயது சித்ரகுப்தன்..கை ரேகையையைப் பதித்தார்கள்...

அதாவது சித்ரகுப்தனின் அப்பாவின் திட்டம் என்னவெனில் சித்ரா குப்தனின் 15வது பிறந்த நாளில் இருந்து ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அவன் கை ரேகையை பெட்டி திறக்கும் இடத்தில் வைத்து பதிந்தால்தான் 20வது வயதில் அந்த பெட்டி அதாவது இன்னும் 5 வருடங்கள் கடந்து திறக்கும்... அப்படி ஒரு ஏற்பாடு.. எல்லாம்.. 100 கோடி சமாசாரம்...

ஆனால் 15 வயது சித்ரகுப்தனுக்கும் நீலிக்கும் 100 கோடி அவரசம்... அதன்.. நீட்சியாக சித்ரகுப்தன் தேடலின் அவனே கண்டு பிடித்த கால இயந்திரம் தான் இந்த மிதிவண்டி.... ஏறி அமர்ந்தான்..... ஒவ்வொரு காலத்துக்கும் போய் தன் எதிர்கால சித்ரகுப்தன்களை(தன்னை) அழைத்து வந்து விட்டான்..... இதோ 5 வருடங்கள் கழித்து திறக்கப் போகும் பெட்டி இன்னும் சில நொடிகளில் திறக்கப் போகிறது.....

அனைவரும் ஆவலோடு பெட்டியை சுற்றி நின்று கவனித்துக் கொண்டிருக்க, திடும்மென கதவை உடைத்துக் கொண்டு வந்த அப்பா..... கால இயந்திரத்தில் தாறுமாக விழ, அது 15 வருடங்கள் பின்னோக்கி கொண்டு போய் போட்டு விட்டது.....

கண் விழித்தவர், "அட... நம்ம வீடுதான் என்று எழுந்து அறைக்குள் போக முயற்சிக்க... உள் அறையிலிருந்து பேச்சு சத்தம் கேட்டது....

நீலி யாரோ ஓர் ஆணுடன் பேசிக் கொண்டிருத்தாள்...

"அவர் வர லேட் ஆகும்..."-அதைத் தொடர்ந்து சிரிப்பு சத்தம்...கவனம் உடைந்து ஏதேச்சையாக கண்ணில் பட்ட கேலன்டரில் தேதி பறந்து கொண்டிருந்தது...

ஆம்... அன்றிலிருந்து 30 நாட்களில்தான்.. அவள் உண்டாகி இருப்பதை நீலி தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது....

சமையலறைக்குள் சென்று சிலிண்டரை திறந்து கொளுத்தி விட்டு வெளியேறிய அப்பா.. அதன் பின் நிகழ்காலத்துக்கு திரும்பவேயில்லை......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (26-Sep-15, 12:26 pm)
பார்வை : 156

மேலே