ட்ரஸ்

ஒரு பண்டிகையின் முதல்நாள் இரவில்
புது துணிகளை நடுக்கூடத்தில் பரப்பி போட்டு
எல்லோரையும் அழைக்கிறேன்..
''வந்து பாருங்க..
அய்யாவின் செலக்சன் எப்படி ?''என்று.
ஆர்வமுடன் ஓடிவந்த அனைவரும்,
அவரவர் உடைகளை அள்ளி
''அற்புதம் ''என்றார்கள்.
அஞ்சாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும்
இளைய மகள் மட்டும் ஒரு கேள்வி கேட்டாள்
தனக்கான உடையை நெஞ்சோடு
அணைத்துக்கொண்டே..
''அப்பா..உங்க ட்ரஸ் எங்கே..?''

[அப்புறம் பாத்துக்கலாம் ன்னு இருந்தேன்.
அதை அவளிடமும் விளக்கி விட்டு
வெளியே வந்தேன்.]

வானம் லேசாக தூறிக்கொண்டிருந்தது.
எனது விழிகளும் தான்.
அப்பாவின் வருமானத்தில் வாழ்ந்த
முப்பது வருட வாழ்வில்,
ஒரு முறையேனும் நான் கேட்காமல்
தவறவிட்ட கேள்வி இது.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - செந்தில (26-Sep-15, 1:05 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 248

மேலே