இரவின் மிச்சமாய் விழுந்த விட்டில்கள்

நேற்றைய மழை உதிர்த்த
விட்டில்களைக் கொண்டு
காக்கைகளின் இரைப்பைகள்
நிறைவதை காணமுடிகிறது

முற்றம் இரைந்து கிடக்கும்
அவற்றின் சிறகுளை
அள்ள பிரயத்தனப்படுகிறேன்

தரையுடன் ஒட்டிக் கொண்டிருப்பவைகளைத்
தாண்டிதான் செல்லமுடிகிறது

கவிதைக்காரனுடனான
என் நிலவின் பொழுதுகளில்,
மழையின் வண்ணங்களை
விளக்கின் வெளிச்சத்திலே
ஆராதித்துவிட்டு,
மாண்டிருக்கும் இவற்றின் வாழ்வே
அந்த நேரத்து என் காமத்தின்
வாழ்வானது..

இன்னும்
ஆயிரமாயிரம் முறிந்த சிறகுகளை
அள்ளிக் கொண்டேயிருக்கிறேன்,
முடியாத நினைவுகளைச் சுமந்த
முடிந்த இரவின் மிச்சமாய்..

எழுதியவர் : அகிலா (29-Sep-15, 12:13 pm)
பார்வை : 1900

மேலே