பறவையும் அம்பும்
துரோணர் தனது சீடர்களுக்கு,மரத்திலிருந்த ஒரு பறவையின் கண்ணைக் குறிபார்த்துஅம்பு எய்யக் கூறினார்.பின் ஒவ்வொரு சீடரையும் அவனுக்கு என்ன தெரிகிறது என்று கேட்க,ஒருவர் மரம் தெரிகிறது என்று சொல்ல அடுத்தவர் கிளை தெரிகிறது என்று சொல்ல அர்ஜுனன் மட்டும் எனக்கு பறவையின் கண் மட்டும் தான் தெரிகிறது என்று சொல்லி பறவையின் கண்ணில் அடித்து வீழ்த்தியது அனைவரும் அறிந்த கதை.அந்த சம்பவம் நடக்கும்போது கர்ணனின் நண்பன் ஒருவன் இந்த நிகழ்ச்சியை ஒளிந்திருந்து கவனித்துவிட்டுப் பின் கர்ணனிடம் நடந்ததை சொன்னான்.பின் அவன் கர்ணனிடம்,''வில் பயிற்சியில் நீ அர்ஜுனனுக்குக் குறைந்தவனா,என்ன?நீயும் முயற்சி செய்.அதோ,மரத்தில் இருக்கும் அந்தப் பறவையின் கண்ணை அடித்து வீழ்த்து,பார்ப்போம்,''என்றான்.கர்ணனும் சம்மதித்து வில்லைக் கையில்
எடுத்தான்.நண்பனுக்கு துரோணர் கேட்ட கேள்வி ஞாபகம் வரவே,அவன் கர்ணனிடம்,''கர்ணா,உனக்கு மரத்தில் என்ன தெரிகிறது?''என்று கேட்டான். கர்ணன்,''எனக்கு ஒன்றும் தெரியவில்லை.''என்றான்.நண்பனுக்கு ஏமாற்றம்.கண் மட்டுமே தெரிகிறது என்று அவன் சொல்வான் என்று எதிர் பார்த்ததால் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.
கர்ணனும் அதே பதிலை சொன்னான்.அடுத்த நொடியே கர்ணனின் வில்லிலிருந்து இரண்டு அம்புகள் பறந்தன.பறவை அடிபட்டுக் கீழே விழுந்தது.நண்பன் பறவையைப் பார்த்தான்.என்ன அதிசயம்!பறவையின் இரண்டு கண்களுமே அம்பால் தாக்கப் பட்டிருந்தன.நண்பனுக்கோ ஒரே ஆச்சரியம்.''இது எப்படி முடிந்தது?'' என்று கேட்க,கர்ணன் சொன்னான்,''எனக்கு மரத்தில் ஏதும் தெரியவில்லை,
ஏனெனில் நான் அந்தப் பறவையோடு பறவையாக ஐக்கியமாகி விட்டேன். அதனால் ஒரு அம்பு கொண்டு ஒரு கண்ணை தாக்கிவிட்டு அந்தப் பறவை திரும்பிக் கீழே விழுவதைக் கணித்து அடுத்த அம்பினால் அடுத்த கண்ணையும் எய்தேன்,''என்றான்.நண்பன் கர்ணனைக் கட்டிப் பிடித்து,''இவ்வளவு திறமை வாய்ந்த உனக்கு அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லையே!''என்று கலங்கினான்.